ஞானசாரவின் பொது மன்னிப்பு குறித்து மீள ஆராய வலியுறுத்தல்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு தொடர்பாக, ஜனாதிபதி மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது.

யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜே.வி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அண்மையில் முல்லைத்தீவில் ஞானசார தேரரின் அடாவடித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

அந்த அடவடித்தனத்தின் ஊடாக எங்களுக்கு சொல்லப்படுகின்ற ஒரு செய்தி என்னவென்றால் முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளை தன்வசப்படுத்திக் கொள்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் அல்லது அதற்கான ஆரம்ப அடியை முன்னெடுத்து வைக்கின்றார்.

பொதுபல சேனா அமைப்பினைச் சேர்ந்த ஞானசார தேரர் ஒரு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டு அந்த தண்டனைக்கு பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள நபராகும்.

பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்ட ஒருவர் அடாவடியில் ஈடுபடும் போது வழங்கப்பட்ட பொதுமன்னிப்பினை மீள் பரிசீலனை செய்ய முடியும். எனவே குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

No comments