கமல்ராஜ் மரணம் சதியா? தந்தை சந்தேகம்

25 ஆயிரம் ரூபாய் பிணைப் பணம் இல்லாததால் சிறையில் வைக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்று முன்தினம் (06) அதிகாலை மட்டக்களப்பு சிறைச்சாலையில் மரணமடைந்திருந்தார். இந்நிலையில் தனது மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக மரணமடைந்த சந்தேக நபரின் தந்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த 4ம் திகதி கைகலப்புக் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் மோசன் மூலம் ஆஜராகிய போது அவருக்கு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி 25000 ரூபாய் தண்டப்பணம் செலுத்தி பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார். இருந்தும் குறித்த நபரிடம் 25000 ரூபாய் தண்டப்பணம் இல்லாததால் குறித்த நபரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.

மறுநாள் அதிகாலை குறித்த நபர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து பிணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்த நபர் வாழைச்சேனை பிள்ளையார் கோயில் வீதி சுங்கான்கேணியை சேர்ந்த தேவதாஸ் கமல்ராஜ் (29) என்ற இரண்டு பிள்ளைகளின் தகப்பனார் ஆவார்.

இவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவியை இழந்த நிலையில் இரண்டு ஆண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

நண்பர்களுடன் இடம்பெற்ற கைகலப்பு காரணமாக நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மேற்படி நபர் சட்டத்தரணி ஊடாக மோசன் போடப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகிய போதும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டப்பணம் 25000 ரூபாயை செலுத்த முடியாது மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தர் மறு நாள் அதிகாலை பிணமாக மீட்கப்பட்டமை அவரது மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நஞ்சருந்தி வயிற்றுப் போக்கு ஏற்பட்டமை காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சந்தேக நபர் மரணம் அடைந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சிறைச்சாலையில் இருந்து நஞ்சருந்தியதாக கூறி எமது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட சந்தேக நபர் ஏற்கனவே இறந்துவிட்டார் அவரை பிணமாகவே வைத்தியசாலையில் அனுமதித்தனர் என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

"சிறைச்சாலைக்குள் நஞ்சு வந்தது எப்படி? 4ம் திகதி சிறையில் அடைக்கப்பட்ட கைதி 6ம் திகதி அதிகாலை நஞ்சருந்தி இறந்ததாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனது மகன் நஞ்சு அருந்தி சாகமாட்டான். சிறைச்சாலைக்குள் எவ்வாறு நஞ்சு வந்தது என்ற பல சந்தேகங்கள் எமக்கு உண்டு. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி நீதியை பெற்று தரவேண்டும்" என மரணமடைந்தவரின் தந்தையான தேவதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தனது தாயை சிறு வயதில் இழந்து தவிக்கும் பிரவீன் (12), அபிலாஸ்(10) என்ற இரண்டு சிறுவர்களும் தற்போது தனது தந்தையை இழந்து அனாதையாகி உள்ளனர்.

No comments