மொட்டா?கையா? திண்டாடுகின்றது மகிந்த தரப்பு?


மொட்டு சின்னத்தைக் கைவிட்டு, வேறோரு பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிபந்தனையை பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
“சிறிலங்கா பொதுஜன பெரமுன தனது மொட்டு சின்னத்தை மாற்றி, வேறொரு பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர இப்போது வலியுறுத்துகிறார்.
இது கடினமான நிபந்தனை என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த சின்னம், இப்போது, அவர்களின் அடையாளமாக மாறியிருக்கிறது. அதனை கட்சி அடையாளம் கண்டுள்ளது.
மொட்டு சின்னத்துக்கு மாற்றுச் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி கோரிக்கை விடுக்கப்பட்ட போது, முதலில் அதனை ஜி.எல்.பீரிசும், பசில் ராஜபக்சவும் நிராகரித்திருந்தனர்.
கடந்தவாரம் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் நடத்திய சந்திப்பின் போது, இந்த விவகாரத்தை தயாசிறி ஜயசேகர மீண்டும் கையில் எடுத்தார்.
எனினும், அதற்கு கோத்தாபய ராஜபக்ச, சின்னத்தை மாற்றுகின்ற  பேச்சுக்கே இடமில்லை என்று நிராகரித்து விட்டார்.
இதனிடையே மொட்டு சின்னத்தில் போட்டியிட்டால் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடியாது என்றும், கை அல்லது வேறு சின்னத்தில் போட்டியிட்டாலேயே அவருக்கு ஆதரவு அளிக்க முடியும் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நிபந்தனை விதித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் எட்டு சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ள போதும், இதுவரை இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
நேற்று முன்தினம் இரண்டு தரப்புகளும் நீண்ட பேச்சுக்களை நடத்திய பின்னர், கருத்து வெளியிட்ட கோத்தாபய ராஜபக்ச இந்தப் பேச்சுக்கள் சாதகமாக இருந்தன என்றும், சுதந்திரக் கட்சியின் ஆதரவு தமக்கு கிடைக்கும் என்றும் கூறியிருந்தார்.
எனினும், கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி முக்கிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது.
கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிட வேண்டும் அல்லது வேறொரு பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று சுதந்திரக் கட்சி கோரியிருப்பதாக அந்தக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
”கோத்தாபய ராஜபக்சவுடனான சந்திப்பின் போது, அதிபர் தேர்தலில் வேறு பொதுவான சின்னத்தில் போட்டியிடுமாறு கேட்டோம்.
இதனை அவர் ஏற்றுக்கொண்டால், கோத்தா பய ராஜபக்சவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்க நாங்கள் விருப்பம் தெரிவித்தோம்.
பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில், போட்டியிடும் அதிபர் வேட்பாளரை ஆதரிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி உடன்படவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments