முல்லையில் பேரணி!


நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் புறந்தள்ளி பௌத்த பிக்குவின் உடல் அடக்கம் செய்யப்பட்டமை, சட்டத்தரணிகள், தமிழ் மக்கள் தாக்கப்பட்டமை என்பவற்றை கண்டித்து முல்லைத்தீவில் ,தமிழர் மரபுரிமை பேரவை, நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம், பிரதேச மக்கள் சட்டதரணிகள் இணைந்து இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.

குறுகிய கால இடைவெளியினுள் பெருமளவு மக்கள் திரண்டு போராட்டத்தில் குதித்தமை கவனத்தை ஈர்த்துள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்குத் துணை நின்றபொலிஸாரை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று செவ்வாய்க்கிழமை சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் வடக்கு மாகாண நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் சட்டத்தரணி கே.சுகாஸ் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் முல்லைத்தீவில் இன்று முற்பகல் சட்டத்தரணிகளும்; ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.

குறிப்பாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்களும் பெருமளவிலான மக்களும் பேரணியில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்களை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கிலும் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை என கிழக்கு மாகாணத்தின் சகல மாவட்டங்களிலுள்ள சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதற்கமைய கல்முனையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணிகள் கல்முனை நீதிமன்ற கட்டட தொகுதி முன்பாக கண்டன எதிர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தனர். கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சட்டத்தரணி ஸாரிக் காரியப்பர் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த போராட்டத்தில், பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி சட்டத்தரணிகள் தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணிகள், நீதி சகலருக்கும் சமனாக கிடைக்க வேண்டும் என்றும் சட்டதரணிகளுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்

No comments