அரசுக்கு முண்டுகொடுப்பவர்களின் கவனத்திற்கு- தமிழ்ச்செல்வன்

வடக்கில் முன்னாள் போராளிகள் உட்பட ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் வேலையற்று காணப்படுகின்றனர். வேலையில்லாத பிரச்சினையால் வடக்கு மாகாணம் இன்று பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ...

யாழ் பல்கலைகழத்தில் காணப்படுகின்ற 400 கல்வி சார  பணியிடங்களில் 170 பேர் வடக்கு மாகாணத்திற்கு வெளியே இருந்து உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின்  சிபார்சின் அடிப்படையில்  நியமிக்கப்படவுள்ளனர். ஆதாவது அமைச்சரின் சமூகத்தைச் சேர்ந்த 170 பேர் யாழ்  பல்லைகழகத்தின் வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர். இவர்களை இம்மாதம் 31 ஆம் திகதிக்க முன் நியமனம் வழங்குமாறு அமைச்சர்  அழுத்தம் கொடுப்பதாக பல்கலைகழக ஊழியர்  சங்கம்  தெரிவித்துள்ளது.

இதில் கிளிநொச்சி பொறியியல் , விவசாய, தொழிநுட்ப பீடங்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள பீடங்களில்  70 வரையானவர்கள் அமைய அடிப்படையில் சில வருடங்களாக  ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இந்த நியமனத்தில் கவனத்தில் எடுக்கப்படவில்லை. இதனை தவிர யாழ்ப்பாணம் கிளிநொச்சியில் ஏராளமானவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்துவிட்டு காத்திருந்து இந் நடவடிக்கையால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அமைச்சரின் செல்வாக்கு காரணமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியாவில் யாழ் பல்கலைகழகத்தின் பீடங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களுக்கே இந்நியமனம் மேற்கொள்ளப்படுகின்ற போது அரசுக்கு முண்டுகொடுகின்ற  வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் வாய்மூடி மௌனமாக இருக்கின்றனர். தங்களின் வெற்றிக்காக உழைத்த இளம் சமூகத்தின் வாய்ப்புக்கள் கண்முன்னே பறிக்கப்படுகின்ற போது  இந்த வடக்கு எம்பிமார் கண்டுகொள்ளாது இருக்கின்றனர்.

தங்களின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு தூதரகங்களிலோ, மத்திய வங்கியிலோ, வேலையினை பெற்றுக்கொடுப்பதல்ல  உங்கள் பணி. உங்களுக்கு வாக்களித்த மக்களின் பிள்ளைகளுக்கு  வேலையினை பெற்றுக்கொடுங்கள், சுயமாக உங்களால் முடியாது என்பது தெரியும். ஆனால் இவ்வாறான வாய்ப்புக்கள் வரும் போது அதனை  உங்கள் இனத்தின் மேம்பாடு கருதி பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்த இடத்தில் அமைச்சரின் இந்த அநீதியான செயற்பாட்டுக்கு அப்பால் அவரை பாராட்டுகிறேன். காரணம் தனக்கு வாக்களித்து அதிகாரத்திற்கு அனுப்பிய இனத்திற்கு,தனது மக்களுக்கு அவர் உண்மயான இருக்கின்றார். அவர்களின் மேம்பாட்டிற்கு உழைக்கின்றார். ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள்....?!

அரசுக்கு முண்கொடுகின்ற போது உங்களின் தனிப்பட்ட நலன்களுக்கு அப்பால் இனத்தின் நலன்களை தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள்.

No comments