வேலூரில் வெற்றி தோல்வியை தீர்மானித்தது சீமான்தான்:

ஆகஸ்ட் 5ஆம் தேதி நடந்த வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தைவிட சுமார் 8,000 வாக்குகளே அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளைத் தவிர இந்தத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,000 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் நான்கரை லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்றிருந்தாலும், முதல், இரண்டாம் இடத்திலிருந்து வெகுதூரத்தில் மூன்றாம் இடத்தை நாம் தமிழர் பிடித்து 26,995 வாக்குகள் பெற்றது. இந்தத் தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்குகள் திமுக, அதிமுகவின் வாக்குகளோடு ஒப்பிடும்போது மிகச் சொற்பமானதுதான். ஆனால் தேர்தல் முடிவை நிர்ணயித்திருப்பதே இந்த 26,000 ஓட்டுகள்தாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இதுகுறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம், “திமுகவுக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவிய தொகுதி வேலூர். அதிலும் குறிப்பாக இவ்விரு கட்சிகளும் அரசியல் என்பதைத் தாண்டி தீவிரமாக மோதிய நிலையில், மக்கள் நீதி மய்யம் போன்ற நகர்ப்புற வாக்குகள் பெற்றிருப்பதாகக் கூறப்படும் கட்சிகூட வேலூர் தேர்தலைப் புறக்கணித்துவிட்டது. ஆனால், பணப்பட்டுவாடாவால் நிறுத்தப்பட்ட தொகுதியில் மீண்டும் அதே வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையிலும் நாம் தமிழர் இந்தத் தேர்தலை எதிர்கொண்ட அணுகுமுறையை முதலில் பாராட்ட வேண்டும். மேலும், சமீபத்தில் நடந்த ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளில் நாம் தமிழர் பெற்ற வாக்குகளை விட இப்போது நடந்த எம்.பி தேர்தலில் அந்தத் தொகுதிகளில் அதிகமாகவே பெற்றிருக்கிறார் சீமான். இது அவரது மெல்ல மெல்ல பெற்றுவரும் வளர்ச்சியைக் காட்டுகிறது.
அடுத்து, இந்தத் தேர்தலில் சீமான் பெற்ற வாக்குகள் திமுகவுக்கு எதிரான சிறு சிறு சமுதாயங்களில் இருக்கும் தமிழ் தேசிய உணர்வுள்ளவர்களின் வாக்குகள். தவிர திமுகவுக்கு எதிரான ஜெயலலிதாவை விரும்பிய தமிழ் தேசியர்களும் சீமானுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதிமுகவில் ஏ.சி.சண்முகம் அல்லாமல் பண செல்வாக்கு இல்லாத இன்னொரு சாதாரண வேட்பாளர் நிறுத்தப்பட்டிருந்தால் சீமானின் வாக்குகள் இன்னும் அதிகமாகியிருக்கும். எனவே சீமான் வாங்கியது திமுகவுக்கு எதிரான அதிமுக ஆதரவு தமிழ் தேசிய வாக்குகளே. இந்த அடிப்படையில் பார்த்தால் இரு முக்கிய வேட்பாளகளின் வித்தியாசத்தை விட மூன்று மடங்கு அதிகம் பெற்றிருக்கிறார் சீமான். எனவே சீமானின் நாம் தமிழர் கட்சி வேலூர் தேர்தல் களத்திலேயே இல்லாது போயிருந்தால், இந்த 8,000 ஓட்டுகள் அல்லது அதைவிடக் கொஞ்சம் கூடுதல் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் ஜெயிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கும்” என்கிறார்.
- ஆரா

No comments