யாழிலுள்ள ஒரேயொரு காடும் அழிவடைகின்றது?


இலங்கை அரசினால் வடமராட்சி-தென்மராட்சி எல்லைக்கு இடைப்பட்ட கப்புதூ அந்தணர்திடல் பகுதியில் அமைக்கப்படும் நீர்தேக்கம் காரணமாக அப்பகுதியிலுள்ள கண்டல்காடுகள் மற்றும் அதனோடிணைந்த உயிரினங்களது வாழ்வியல் கேள்விக்குறியாகியுள்ளது.

இலங்கையில் மழை நீரை சேகரித்து மேற்கொள்ளப்படும் பாரியளவிலான குடிநீர் வழங்கல் திட்டத்தின் நிர்மாணப் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நேற்று முற்பகல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யாழ் மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்து வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வளிக்கும் முகமாக ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், இதற்காக இரண்டு பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டம் நீர்ப்பற்றாக்குறையினால் மிகுந்த சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் மாவட்டமாகும். இந்த பிரதேசத்தில் ஆறு அல்லது சிறிய மற்றும் பெரியளவிலான நீர்த்தேக்கங்கள் எதுவும் காணப்படுவதில்லை. இதனால் 1,012 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட இப்பிரதேசத்திற்கு வருடந்தோறும் 1,250 மில்லிலீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றாலும் அந்த நீரை சேகரிப்பதற்கான வசதிகள் எதுவும் இங்கு அமையப்பெறவில்லை. எனவே இம்மக்களின் நீர்த்தேவை நிலத்தடி நீரை அடிப்படையாகக் கொண்டே பூர்த்தி செய்யப்படுகின்றது.

வருடாந்த மழைவீழ்ச்சியின் ஒரு பகுதி மாத்திரம் குடா நாட்டில் அமைந்துள்ள வடமராட்சி, உப்பாறு மற்றும் ஆனையிறவு ஆகிய மூன்று களப்புகளில் தங்கியிருப்பதுடன், அந்த நீரும் எவ்வித தேவைகளுக்கும் பயன்படுத்தப்படாது 39 மில்லியன் கனமீற்றர் நீர் பயனின்றி கடலுக்கு செல்கின்றது.
யாழ் குடா நாட்டின் வருடாந்த நீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்கு 18.28 கனமீற்றர் தேவையாகவுள்ளது. அந்த நீரை மிக இலகுவாக மேற்குறிப்பிட்ட நீரினூடாக பூர்த்திசெய்வதற்கான ஆற்றல் காணப்படுவதுடன், அதன் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தினை இரண்டு வருடங்களில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

எனினும் இத்திட்டத்திற்கென அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடம் கண்டல்காடுகளை கொண்டிருப்பதுடன் பெரும் சம்புபுற்களை கொண்டதொரு பிரதேசமாகும்.

குடாநாட்டில் இருக்கின்ற ஒரேயொரு காடான இப்பிரதேசம் இத்திட்டத்தின் கீழ் அழிவுற்றுப்போகுமென அச்சம்படுகின்றது.

தமிழ் மக்களதது எல்லைக்கிராமங்களை ஆக்கிரமித்து விளக்கமளிக்கின்ற வனஜீவராசிகள் திணைக்களம் இவ்விடயத்தில் மௌனம் காத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments