நட்டாற்றில் விடப்பட்டுள்ள ஏதிலிகள்?


போர்க் காலத்தில் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து தற்பொழுது மீள்குடியேறிய வவுனியாவின் எல்லைக்கிராம மக்கள அநாதரவாக கைவிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.தாயகம் திரும்பிய மக்களுக்கு இலங்கை அரசாங்கம் வீடுகளை மாத்திரமே நிர்மானித்துக் கொடுத்துள்ளது. ஆனால் அடிப்படை வசதிகள் எதுவுமே செய்து கொடுக்கப்படவில்லை. வவுனியாவில் உள்ள சிவில் அமைப்புகளும் இந்த மக்களைக் கைவிட்டுள்ளதாகவும் அருட்தந்தை அன்ரனி சோசை குற்றஞ்சுமத்தியுள்ளார்.

வவுனியா - வெண்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணாட்டி, பரமனாலங்குளம், கணேசபுரம் ஆகிய மூன்று கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் நூற்று எழுபத்தைந்து தமிழ்க் குடும்பங்கயே ஒருவேளை உணவிற்கு வழியின்றிப் பெரும் அவலத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கிராமங்களை சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள் 1990 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கைகளினால் தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்திருந்தன.அவை தற்போது மீள்குடியேறி வாழ்ந்து வரும் நிலையில் நிரந்தர வருமானமின்றி ஒருவேளை உணவுக்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றன.
மூன்று கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் யானை, கரடி போன்ற காட்டு விலங்குகளுடன் தினமும் போராடி வருகின்றனர்.விவசாயத்தை மாத்திரமே அடிப்படை ஜீவானோபயமாகக் கொண்டுள்ள இந்த மக்கள் நிலக்கடலை, ஏனைய தானிய வகைகளை அவர்களது வசதிக்கேற்ப பயிரிட்டாலும் அவையனைத்தும் காட்டு விலங்குகளால் ஒரு இரவிலேயே அழிக்கப்படுகின்றன.

இந்தக் கிராமங்களில் குடிநீர் கிணறுகள் ஏனைய நீர் நிலைகள், குழாய் நீர் விநியோகங்கள் எதுவுமே இல்லாத நிலையில் குடிநீரைப் பெற்றுகொள்வதற்கே இவர்கள் பெரும் அவலத்தை எதிர்கொள்கின்றனர்.

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு போதிய சத்துணவுகள் கிடைப்பதில்லை. இதனால் ஆரோக்கியக் குறைபாடு காணப்படுகின்றதெனவும் வணபிதா  அன்ரனி சோசை தெரிவித்துள்ளார்.

No comments