பிரான்சில் ஆரம்பமாகியுள்ள தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 26 ஆவது ஆண்டாக   நேற்று
சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் ஆரம்பமாகியது.

ஆரம்ப நிகழ்வாக குறித்த மைதானப் பகுதியில் அமைந்திருக்கும் தமிழீழ விடுதலை புலிகளில் முதற்களப்பலியான மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் நினைவுத்தூபிக்கு முன்பாக வணக்க நிகழ்வு இடம்பெற்றது. ஈகைச்சுடரினை மாவீரர் வீரவேங்கை இளந்தேவன் அவர்களின் சகோதரர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மைதானத்தில் மாவீரர் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை மாவீரர் வீரவேங்கை தனேந்திரன் அவர்களின் சகோதரி ஏற்றிவைக்க, கடற்கரும்புலி மேஜர் ஈழவீரனின் சகோதரரும் தமிழர் விளையாட்டுத்துறை பொறுப்பாளருமான திரு.கிருபா அவர்கள் மலர் வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகின.

இந்த வருடம் ஒன்பது கழகங்கள் பங்கு பற்றியுள்ளன.  நேற்று சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கான தெரிவுப்போட்டிகள் இடம்பெற்றன. சில இறுதிப் போட்டிகளும் இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து இன்று (14.07.2019) ஞாயிற்றுக்கிழமை மற்றும் 21.07.2019 சனிக்கிழமை தெரிவுப்போட்டிகளும் இடம்பெறும் அதேவேளை, 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியும் இடம்பெறவுள்ளன. போட்டிகள் யாவும் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.  இப்போட்டிகளைக் கண்டுகளிப்பதற்கு அனைவரையும் வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

No comments