மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்

தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலய மாணவர்களை ஒருங்கிணைத்து வருடம் தோறும் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்
போட்டிகள் இந்த வருடம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் நான்காவது மாநிலத்திற்கான  மத்திய மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகள் 13.7.2019 சனிக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் நடாத்தப்பட்டது. இப்போட்டிகளில் இந்த மாநிலத்தில் உள்ள 17 தமிழாலயங்களைச் சேர்ந்த 650 மாணவமாணவிகள் பங்குபற்றியிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு யேர்மன் தேசியக்கொடியுடன் தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்க் கல்விக் கழகத்தின் கொடியும் ஏற்றப்பட்டு விளையாட்டு வீர வீராங்கணைகளினால் ஒலிம்பிக் தீபம் ஏந்தியபடி மைதானத்தைச் சுற்றி ஓடிவந்து ஒலிம்பிக் தூபியில் தீபம் ஏற்றப்பட்டது. பின்பு வீர வீராங்கணைகளுடன் நடுவர்களும் பொறுப்புகளில் உள்ளவர்களும் பொதுமக்களுமாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்;.

அடுத்த நிகழ்வாக தமிழாலய மாணவ மாணவிகளின் அணிவகுப்பு ஆரம்பமானது. ஆண்களும் பெண்களுமாக ஒன்பது அணிவகுப்புகள் பங்குபற்றியிருந்தன. மிக நேர்த்தியான முறையில் அனைத்து அணிவகுப்புகளும் மிகச்சிறப்பாக இருந்தது. இம்முறை இவர்களுக்கு நடுவர்களாக பல தழிழாலயங்களில் அணிவகுப்புக்களில் பங்குபற்றி பலமுறை வெற்றியீட்டிய  அனுபவம் கொண்ட மாணவர்கள் நடுவம் செய்தனர். இவர்களின் தீர்ப்பை சகல தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருந்தமை தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினர் எடுத்துக் கொண்ட புதிய முயற்ச்சிக்கு வரவேற்பளிப்பதாக இருந்தது.

அந்த வகையில் பெண்கள் அணிகளில்.

79.7 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தை வூப்பெற்றால் தமிழாலயமும்.
69.2 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தை முன்சன்கிளட்பாக் தமிழாலயமும்.
66.7 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தை நொய்ஸ் தமிழாலயமும்.
65.2 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தை மேபுஸ் தமிழாலயமும்.
பெற்றுக்கொண்டனர். (பெண்கள் அணிகளில் இரண்டு தமிழாலயங்கள் மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.)
ஆண்கள் அணிகளில்
75 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தை மேபுஸ் தமிழாலயமும்.
68 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை வூப்பெற்றால் தமிழாலயமும்.
66 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தை முன்சன்கிளட்பாக் தமிழாலயமும் தமதாக்கிக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு உடனுக்குடன் வெற்றிப்பதக்கங்கள் அணிவித்து மதிப்பளிக்கப்பட்டது. மூன்று போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்ற போட்டியாளர்களைச் சிறந்த வீரர்களாக வெற்றிக்கேடயங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
இறுதியில் போட்டியிட்ட தமிழாலயங்களின் புள்ளிகளின் அடிப்படையில் முன்நிலையில் இருந்த மூன்று தமிழாலயங்களுக்கு வெற்றிக் கேடயங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
அந்தவகையில்
498 புள்ளிகளைப் பெற்று முதலாவது இடத்தினை முன்சன்கிளட்பாக் தமிழாலயமும்,
458 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தினை மேபுஸ் தமிழாலயமும்,
393 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தினை நொய்ஸ் தமிழாலயமும், மதிப்பளிக்கப்பட்டது.
பின்பு தேசியக் கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்னும் எழுச்சிப்பாடல் ஒலிக்கவிடப்பட்டு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் கோசத்துடன் போட்டி நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.

இன்னும் யேர்மனியின் வடமாநிலத்திற்கான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் 7.9.2019 சனிக்கிழமை யேர்மனியின் ஒஸ்னாபுறுக் நகரத்தில் நடைபெற இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து இறுதிப் போட்டி நிகழ்வாக யேர்மனியின் ஐந்து மாநிலங்களிலும் சகல பிரிவுப் போட்டிகளிலும் பங்குபற்றி முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவமாணவிகளுக்கான போட்டி நிகழ்வுகள் 21.9.2019 சனிக்கிழமை நொய்ஸ் நகரத்தில் நடைபெற இருக்கின்றது.

No comments