கூட்டமைப்பிற்கான கடைசி சந்தர்ப்பம்?


அரசிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட இருக்கின்ற இந்த இறுதிச் சந்தர்ப்பத்திலாவது தமிழ் மக்களின் நலன்சார்ந்து கூட்டமைப்பினர் முடிவெடுக்க வேண்டுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரனையொன்று நாடாளுமன்றத்தில் வர இருக்கின்றது. அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வருகின்ற பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்யப் போகின்றார்கள் என்றொரு கேள்வி இருக்கின்றது.

முல்லைத்தீவின் செம்மலையில் இருக்கக்கூடிய 300 வருடங்கள் பழமையான பிள்ளையார் கோவிலில் அங்கு இரானுவத்தின் துணையுடன் ஒரு புத்த துறவி பௌத்த ஆலயத்தை நிர்மானித்திருக்கின்றார்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று வருகின்ற பொழுது வடக்கு கிழக்கு மாகாணத்தில் யுத்தத்திற்குப் பின்பாக எவ்வளவு காணிகள் பிடிக்கப்பட்டிருக்கின்றது, அந்தக் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதும், பௌத்த துறவிகளினால் புதிதாக உருவாக்கப்பட்ட பௌத்த கோவில்கள் தவறானதென்றும் ஆகவே அவை அனைத்தும் நிறுத்தப்பட வேண்டுமென்றும் குறைந்தபட்சம் இப்படியான சில கோரிக்கைகளையாவது அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டும்.

அவ்வாறு முன்வைத்து அந்தக் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்ற சில உறுதிமொழிகளைப் பெற்றுக் கொண்டாவது இவர்கள் இதற்கு வாக்களிக்கலாம். ஏனென்றால் ஏற்கனவே இந்த அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் இருந்த பாதுகாத்துவர்கள் கூட்டமைப்பினர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இப்பொது வரக் கூடிய நம்பிக்கையில்லாத் தீர்மானத்திலும் அதனைத் தான் இவர்கள் செய்யப் போகின்றார்கள். ஆனால் அவற்றைச் செய்வதற்கு முன்பாக குறைந்தபட்சம் அரசாங்கம் 2900 ஆயிரம் மில்லியன் ருபாயை ஒதுக்கி வடகிழக்கு மாகாணங்களில் புதிய பௌத்த கோவில்களை கட்டுவதற்கான வேலையைச் செய்கின்ற பொழுது அதனை உடன் நிறுத்த வேண்டுமென்றும் ஏற்கனவே இவ்வாறு அமைக்கப்பட்டவை அகற்றப்பட வேண்டுமென்றும் குறைந்தபட்ச உறுதிமொழிகளையாவது பெற்றுக் கொண்டு செயற்படுவார்களாக இருந்தால் நிச்சயமாக அது தமிழ் மக்களுக்கு பிரயோசமானதாக இருக்கும்.

ஆகவே இறுதி சந்தர்ப்பத்திலாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசித்து முடிவெடுப்பார்களாக இருந்தால் அது தமிழ் மக்களுடைய குறைந்தபட்ச நலன்களுக்காவது பிரயோசனப்படுமென சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

No comments