மட்டக்களப்பில் காவல்துறையின் கைத்துப்பாக்கி பறிப்பு?


மட்டக்களப்பு புதூர் பகுதியில் இலங்கை காவல்துறையினரின் கைத்துப்பாக்கியினை பறித்துக்கொண்டு சிலர் தப்பித்து ஓடியுள்ளனர்.இதனையடுத்து இராணுவத்தினர் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மட்டக்களப்பு புதூர் சிமில தீவுப்பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை தடுத்து நிறுத்துவதற்கு போக்குவரத்து பொலிஸார் முயற்சித்துள்ளனர்.

எனினும், நிறுத்தாமல் சென்ற குறித்த இருவரும், எதிரே வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் குவிந்த இளைஞர்கள் சிலர் போக்குவரத்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பினால் கூறப்படுகின்றது.

இதன்போது போக்குவரத்து பொலிஸாரின் கைத்துப்பாக்கியினை ஒருவர் பறித்துக்கொண்டு ஓடியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு புதூர் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விபத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கிசிச்சை பெற்றுவருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

No comments