விழிப்புடன் செயல்பட தயாராகுங்கள் தோழர்களே; கொளத்தூர் மணி விசேட அறிவிப்பு!

தமிழகத்தில் காவல்துறையினரின் பாகுபாட்டோடு பக்கச்சார்பாக செயல்பாடுகளினால் பல சமூக ஆர்வலர்கள் மீது
அண்மைக்காலமாக பொதுவெளியிலும் சமூக வலை தளங்களிலும் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களுக்காக அந்த கருத்துகளில்  சமூக அமைதிக்கு  எவ்வித நெருடலும் சீர்குலைவும் ஏற்படாத நிலையிலும் கூட காவல்துறையும் நீதித்துறையும் முன்னெடுக்கும் பக்க சார்பான நடவடிக்கைகளை தொடர்ந்து காண முடிகிறது.

ராஜராஜ சோழனைப் பற்றிய திறனாய்வு பேச்சுக்கு காவல்துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்கிறது 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்தவற்றை ஏன் இப்போது பேச வேண்டும் என்கிறது நீதிமன்றம்.முன் பிணைக்கு கூட இனி பேச மாட்டேன் என உறுதி கேட்கிறது நீதித்துறை .

பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று பேசியதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருந்தாலும் ஊடகங்கள் அனைத்தும் சில நாட்கள் அது குறித்தே பேசியிருந்தாலும்  பல புகார் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுப்பதில் தயங்கி நின்ற துறைகள்தான் நம்மைப் போன்றோர் மீதான புகார்களுக்கு நடவடிக்கைகளை எடுக்க அவசர அவசரமாக செயல்படுகிறார்கள் உயர் நீதிமன்றத்தை பற்றியே பொது வெளியில் இழிவான சொற்களால் பேசி அது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் காணொளிகளாக பரவி இருந்த காலத்தில்கூட வெறுமனே வருத்தம் தெரிவித்தால் தன் நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ளத் தயாராக இருக்கின்றன இந்தத் துறைகள்.
ஊடகத்துறையில் உள்ள அனைத்துப் பெண்களையும் இழிவுபடுத்தி பேசிய வாய்க்கொழுப்பெடுத்தவன் மீது ஆர்ப்பாட்டம், போராட்டம், சமூக வலைத்தள விமர்சனக் கணைகள் என அழுத்தம் வந்த பின்னர்தான் வழக்குப்  பதிவு செய்கிறது காவல் துறை . உயர்நீதி மன்றம் முன்பிணை மறுத்து உடனடியாய் சரணடைய ஆணையிட்ட பின்னரும்கூட  ஒரு பக்கம் பேருக்குத் தேடுகிறது காவல்துறை .மறுபக்கம் பாதுகாப்புக் காவலர்களுடன் அலட்சியமாக நடமாடிக் கொண்டுதானிருந்தார் குற்றவாளி. பெண்களை இழிவு செய்து பேசியவன் மீது நடவடிக்கை எடு என அறவழியில் போராடியவர்கள் மீதே வழக்குகளை அப்போது ஏவியது காவல்துறை .

மதுரை தோழர் மா.பா. மணிகண்டன் மீது பொதுமக்களில் எவரும் புகார் கொடுக்காத நிலையிலும் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் மனுவைக் கேட்டு வாங்கி வழக்குப்பதிந்து கைது செய்தது காவல்துறை. இந்தமுறை மட்டுமல்ல இதற்கு முன்னரும் கூட மதுரையில் சுவரொட்டி ஒட்டிய வழக்குக்காக இதேபோல கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்துப் புகார் விண்ணப்பம் பெற்று வழக்குப் பதிவு செய்தது காவல்துறை .

இன்றும் (27.07.2019) கோவையில் ஒரு நிகழ்வு.....
தோழர் நிர்மல் அவர்கள் 12 .07.2019 அன்று பதிவிட்ட ஒரு முகநூல் கருத்தை
காவல் துறை 17.07.2019 அன்று வழங்கிய ஆர்ப்பாட்ட மறுப்பு குறிப்பாணையில் குறிப்பிட்டு இருக்கிறது. அதில் இந்துக்களை கொச்சைப்படுத்தியதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். அந்த பதிவில் இந்துக்களை கொச்சைப்படுத்தும் வார்த்தைகளோ நோக்கமோ இல்லாத போதும் காவல் துறை வலிய அந்த கருத்தை திணித்திருக்கிறது, 17.07.2019 அன்று காவல் துறைக்கு அந்த பதிவு தெரிந்திருந்தாலும் கூட 10 நாட்கள் கடந்து அந்த பதிவினால் சமூக அமைதிக்கு எந்த குந்தகமும், எந்த சம்பவங்களும் நடைபெறாத நிலையில் காவல் துறை இந்த வழக்கை பதிவு செய்து சிறையில் அடைத்திருப்பது யாருடைய அழுத்தம் காரணமாக என சந்தேகம் எழுகிறது.

வழக்குகள் வரட்டும்! அவற்றை நாம் நீதிமன்றத்தில் சந்திப்போம்!

இந்த நிலையில் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்க வேண்டியவனாக நான் இருக்கிறேன்.

 பெரியார்  இயக்கங்கள், சூழல் ஆர்வலர்கள், முற்போக்கு இயக்கங்கள் எவரொருவர்  பொதுக் கூட்டத்திற்கோ, ஆர்ப்பாட்டத்துக்கோ அனுமதி கேட்டாலும், உடனே அந்நிகழ்வைத் தடை செய்ய வேண்டும் என இந்துத்துவவாதிகள்  தடை மனு கொடுக்கிறார்கள்; மறியல் செய்வோம் என்கிறார்கள். பலவேளைகளில் அவற்றையே காரணமாகக் கூறி அனுமதி மறுக்கிறது காவல்துறை.

 ஆனால் இந்துத்துவ கூட்டங்களில் வன்முறை உரைகளும், கொலை மிரட்டல்களும், வெறுப்புமிழும் ஆபாச உரைகள் ஆற்றப்பட்டாலும் நம்மவர்கள் அவர்கள் மீது புகார் மனு அளிப்பதே இல்லை;  அளித்தாலும் காவல்துறை அவற்றைக் கண்டுகொள்வதும் இல்லை; நம் தோழர்களும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இல்லை.

இனிமேலாவது அவர்கள் கூட்டம் நடத்த அனுமதி கோரினால், அவர்களது முன் வரலாறுகளை கூறி காவல்துறையில் தடை மனு அளித்தல் வேண்டும்; அவர்களது கூட்டங்களுக்கு சென்று ஒலிப்பதிவு, காணொளி பதிவு செய்து வன்முறை வெறுப்பு பேச்சுக்கள் குறித்த புகார்களை ஆதாரங்களுடன் அளித்திட வேண்டும்;  உரிய நடவடிக்கை இல்லாதபோது ஆர்ப்பாட்டம், சுவரொட்டிகள் வழியாக அழுத்தம் கொடுத்தல் வேண்டும்; அவற்றால் பயன் இல்லை எனில் காவல்துறை மீதும், உரிய  நடவடிக்கை மேற்கொள்ளாத அரசுத்துறையினர் மீதும் நீதி மன்றத்தில் தனி வழக்கு  பதிவு செய்தல் வேண்டும். காவல்துறை அதிகாரிகள் தனிவிடுப்பு எடுத்துக் கொண்டு நீதிமன்றங்களுக்கு வந்து கடமை தவறியதற்கு பதில் சொல்லட்டும்.

இனிமேலும் நாம் அமைதி காப்பது என்பது, நாம் ஏற்ற கொள்கைக்கு இழைக்கப்படும் துரோகம் என்பதை உணர்ந்து செயல்பட்டாக வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.  தோழர்கள் மனதில் கொள்ளுங்கள்!
மற்ற இயக்கத் தோழர்கள் மத்தியிலும் இது குறித்து பேசுங்கள்!

பெரும்பான்மை மக்கள் நலன் வேண்டி இயக்கம் எடுக்கிற நம்மை  தடை செய்ய நடவடிக்கை எடுக்க அவசரம் காட்டும் காவல்துறை -  சமூக அமைதியை சீர்குலைக்கும் வன்முறையை பேச்சுகளுக்கு -  வன்முறை நடவடிக்கைகளுக்கு - மத வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விடுவது இனி சாத்தியமில்லை என்ற ஒரு நெருக்கடியை நாம் உருவாக்கியாக ஆகவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


No comments