போரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு!

போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி நிலையத்தை வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன்
இன்று புதன் கிழமை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் புதியவாழ்வு நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சி நிலையத்தை மக்கள் நலன் காப்பகத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.

விக்கினேஸ்வரன் தனது உரையில் தெரிவிக்கையில்:-

இன்றைய தினம் இந்த கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் புதியவாழ்வு நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்படுகின்ற, போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி நிலையத்தை வைபவ ரீதியாகத் திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் பெருமகிழ்வடைகின்றேன்.

முப்பது வருடங்களுக்கு மேலாக எமது பகுதிகளில் இடம்பெற்ற தொடர் யுத்தம் காரணமாக சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மிகப்பெரியதாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்கள் சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் நவீன வசதி வாய்ப்புக்களை அரசினுடாகவும் வெளிநாட்டு உதவிகளினூடாகவும் பெற்று பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ள போதிலும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழும் சாதாரண தர மக்கள் எதுவித உதவிகளோ அனுசரணைகளோ அற்ற நிலையில் மூன்று வேளை உணவுக்குக்கூட சிரமப்படுவதை நாம் பல சந்தர்ப்பங்களில் அவதானித்திருக்கின்றோம்.

இந் நிலையில் எம் மக்களின் வாழ்கைத்தரத்தை உயர்த்த, அவர்களின் அடிப்படைத் தேவைகளையேனும் பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் நடந்து கொள்ள வேண்டுமென்ற அவாவில் நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் பணியாற்றினேன். அப்போது கிடைத்த நிதிகளில் பெரும்பகுதியை இவ்வாறான தேவைகளுக்காகவே செலவிட்டும் வந்திருக்கின்றேன். எனினும் எமது ஒதுக்கீடுகள் அனைத்தும் யானைப் பசிக்கு சோளப்பொரி இட்ட கதையாகவே அமைந்திருந்தன. என்னைச்  சந்திக்க வந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனும் ஏனைய பிரமுகர்களுடனும் உரையாடும்போது எமது உரித்துக்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடியதுடன் நின்றுவிடாது எம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது தொடர்பிலுந் தொடர்ந்தும் பேசிவந்;திருக்கின்றேன். அரசு வழங்குகின்ற ஒதுக்கீடுகளில் வடக்கு கிழக்கு பகுதிகளுக்குக் கூடிய ஒதுக்கீடுகளை வழங்கவேண்டுமென அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடமும் கௌரவ பிரதம மந்திரியிடமும் தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகித்து வந்திருக்கின்றேன். ஆனால் எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் வட கிழக்கை மாற்றாந்தாய் போன்று நடத்துவதையே நான் கண்டுள்ளேன்.

அது மட்டுமல்ல. நாங்கள் எமது முயற்சி மூலம் முன்னேற முன்வந்தால் எமது முயற்சிகளைத் தடுத்து நிறுத்தவும் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் பின் நிற்கவில்லை. உதாரணத்திற்கு மரக்கறி, பழங்கள் போன்றவற்றை இங்கு பயிரிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒரு மத்திய கிழக்கு ஸ்தாபனம் முன்வந்தது. 200 ஏக்கர் காணி தேவைப்பட்டது. அடையாளம் கண்டு அவர்களுக்குக் குத்தகையில் கொடுக்க நாம் முன் வந்தோம். முதலீட்டாளர்கள் காணியை வந்து பார்த்து “நுஒஉநடடநவெ” என்றார்கள் அதாவது நிலம், நீர், சுற்றாடல், போக்குவரத்து வசதிகள் எல்லாமே நன்றாக இருக்கின்றன என்றார்கள். இன்னும் ஓரிரு வாரங்களில் ஒப்பந்தத்தைக் கையெழுத்திட நினைத்திருந்தபோது கொழும்பில் இருந்து காணிச்செயலாளர் நாயகம் “குறித்த காணி வனத் திணைக்களத்திற்கு உரியது, காணி தர முடியாது” என்றார். குறித்த காணி எந்தக் காலத்திலும் வனத் திணைக்களத்திற்குச் சொந்தமாக இருந்ததில்லை. போரின் போது 2007ம் ஆண்டு பழழபடந ஐப் பார்த்து தான்தோன்றித்தனமாக வனங்களை அடையாளப்படுத்தி விட்டு அவற்றை வைத்து   எம்மை முன்னேற விடாமல் தடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது. எமது பல்வேறு முயற்சிகள் அனைத்தும் நிறைவேறாத நிலையில் இம்மக்களுக்கான ஓரளவு உதவிகளை எமது நாடு கடந்த உறவுகளினூடாகப் பெற்றுக்கொடுக்க முன்வந்தோம்.  எமது முயற்சிகளில் ஓரளவு வெற்றியும் கண்டுவருகின்றோம். ஆனால் இவற்றிற்கும் தடைகள் விதிக்கப்படாதென நாம் முற்றிலும் நம்பி விட முடியாது.

பணமாகவோ, பொருட்களாகவோ வழங்கப்படுகின்ற உதவிகள் அனைத்தும் சில நாட்களில் செலவழிந்துவிடுவன. அதன் பின் உதவிக்காக ஏங்குகின்ற நிலையே எம் மக்களிடையே இன்று பெரும்பாலும் காணப்படுகின்றது. இந் நிலை மாற்றப்பட வேண்டுமாயின் நிரந்தர வருவாயைத் தரக்கூடிய வகையில் அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படல் வேண்டும். விவசாய முயற்சிகளில் சிறந்த அனுபவங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு விவசாய உபகரணங்களை வழங்கலாம். நீர் இறைக்கும் இயந்திரம் போன்ற உபகரணங்களை வழங்கலாம். தையற்கலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தையல் உபகரணங்களை வழங்கலாம். கால்நடை வளர்ப்புத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கால்நடைகளை வழங்கலாம். அதாவது அவர்கள் செய்யும் தொழில்களுக்கு நாம் அனுசரணையாய் இருந்து அவர்களைக் கரையேற விடுவதே எமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
புதிய வாழ்வு நிறுவனத்தினூடாக இன்று ஆரம்பித்து வைக்கப்படுகின்ற இந்த பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சியும் சிறப்பான பெறுபேற்றைத் தேடித்தரும் என நம்புகின்றேன். தொழிற்பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளவிருக்கும் பயனாளிகள் குறிப்பிட்ட தொழில் முயற்சிகளில் விருப்புடையவர்களாகவும் ஆர்வமுள்ளவர்களாகவும் இருத்தல் அவசியம். செய்யுந் தொழிலில் ஆர்வமும் ஊக்கமும் இருந்தால்த் தான் நாங்கள் முன்னேற முடியும்.

எம்மவர்கள் சிலரில் மிகப்பெரிய ஒரு பலவீனத்தை நான் கண்டுள்ளேன். அதாவது ஒரே இரவில் பணக்காரர்களாக மாறிவிட வேண்டும் என்ற குண இயல்பே அது.  சினிமா பார்த்து இவ்வாறு மாறினார்களோ நான் அறியேன். பலர் வங்கிகளில் இருந்தும், தனிப்பட்டவர்களிடமிருந்தும், கடன் தரும் நிலையங்களில் இருந்தும் தமது சக்திக்கு மீறிய அளவில் கடன்களைப் பெறுகின்றார்கள். அப்பணத்தின் மூலம் டாம்பீக வாழ்க்கையில் ஈடுபடுகின்றார்கள். பின்னர் கடன்களின் வட்டியைக்கூட மீளச்செலுத்த முடியாத நிலையில் கையில் இருந்த அற்பசொற்ப பொருள் பண்டங்களையும் இழந்து அவர்கள் நடுத்தெருவுக்கு வருகின்ற நிலையை நாம் கண்டுள்ளோம். சிலர் தமது இன்னுயிர்களை மாய்த்துக் கொள்கின்ற துர்பாக்கிய நிலைகளையும் அவதானித்திருக்கின்றோம். சிறிதாகத் தொடங்கிப் பெரிதாக வளர்ச்சி பெறுவது என்றுமே நிலைத்து நிற்கும். அதற்கான அத்திவாரம் பலமாக இருக்கும். ஆனால் திடீர் பணக்காரர்கள் வந்தவாறே போய் விடுவார்கள்.

இன்று போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற பலர், எத்தனை இளைஞர்கள், யுவதிகள், குடும்பங்கள் அழிந்தாலும் பரவாயில்லை நாம் செல்வந்தர்களாக உடனே மாறிவிட வேண்டும் என்ற அவாவில் இவ் வர்த்தகங்களில் ஈடுபட்டுவருகின்றார்கள். ஓரிரு தடவைகள் இவ் வர்த்தகம் நிறைய வருவாயைத் தேடித் தரலாம். அடுத்த தடவையில், வந்த வெள்ளம் நின்ற வெள்ளத்தையும் அள்ளிக் கொண்டு போன கதையாகி விடும். வாழ்க்கைக்குப் பணம் அவசியம். ஆனால் பணமே வாழ்க்கை என்றாகி விட்டால் அது அர்த்தமில்லாமல் போய்விடும்.

வடபகுதி மக்களைப் பொறுத்த வரையில் அவர்கள் கல்வி என்னும் நிரந்தர செல்வத்தினால் உயர்ந்தவர்கள். ஆனால் இன்று எமது கல்வி நிலை மிகக் குறைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. பெற்றோர்கள், பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளில் அக்கறை காட்டுகின்றார்கள் இல்லை. ஆசிரிய, ஆசிரியைகள் முன் போல் தமது கடமையிலும் பிள்ளைகளின் வருங்காலத்திலும் கரிசனை காட்டுகின்றார்கள் இல்லை. பிள்ளைகளும் படிப்பில் ஆர்வம் காட்டாது வாள் வீச்சிலும், மோட்டார் சைக்கிள் ஓட்டங்களிலும், கைத்தொலைபேசிகளிலுமே காலத்தைக் கழிக்கப் பார்க்கின்றார்கள். இளைஞர் யுவதிகளிடையே பொறுப்பின்மை ஏற்படக் காரணம் அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணமோ என்று எண்ண வேண்டியுள்ளது. எனக்கு தெரிந்த வரையில் பலர் கஷ்டப்பட்டு, வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி தமது உறவுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புகின்றார்கள். இங்குள்ள எமது இளைஞர் யுவதிகளோ கண்மண் தெரியாமல் தேவையற்ற செலவுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந் நிலை மாற்றப்பட வேண்டுமாயின் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் பிள்ளைகள் மீது கூடிய அக்கறை செலுத்த வேண்டும். மாணவ மாணவியரின் கற்றல் நடவடிக்கைகள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதைக் கூர்ந்து அவதானித்தல் வேண்டும். இன்றைய நிலையில் நாம் எமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை காட்டாவிடின், அவர்களின் டாம்பீக செலவுகள் பற்றி ஆராயாவிடின், தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்குப் பிற சக்திகள் எவையுந் தேவையில்லை. எமது இளம் சந்ததியினரே அக் கைங்கரியத்தை நிறைவேற்றக் கூடியவர்களாக மாற்றப்படுவார்கள். இந்த உண்மை நிலையைக் கருத்தில்க் கொண்டு பெற்றோர்கள் தமது பிள்ளைகள் மீது அதீத கண்காணிப்புக்களை இனியாவது மேற்கொள்ள வேண்டும். அவர்கள் தவறினால் எமது இனமுந் தவறிப் போய்விடும். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மீது இருக்கும் கடப்பாடு போல்த்தான் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மீது எமது சமூகத்திற்கு இருக்கும் கடப்பாடு. எமது சமூக கடப்பாடொன்றினை நாம் இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம்.

வெளிநாடுகளில் வசிக்கின்ற புலம் பெயர்ந்த மக்கள் அவர்தம் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் வாழ்வில் வளம் பெற வேண்டும் என்ற அவாவில் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் அங்கிருந்தவாறே நிதி உதவிகளைப் புரிந்து வருகின்றனர். ஆனால் அவர்களால் வழங்கப்படுகின்ற உதவிகள் முறையாக செலவு செய்யப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கத் தவறிவிடுகின்றனர். இதுவே இளைஞர் யுவதிகளைத் தப்பான வழிக்கு கூட்டிச் செல்ல இடமளிக்கின்றது. எனவே போரினால் பாதிக்கப்பட்டோருக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு சதமுங் கூட அவர்கள் நலத்திற்கே செலவு செய்யப்பட வேண்டும். அதை நாங்கள் கண்காணிக்கத் தவறக் கூடாது.

இவற்றையெல்லாம் நாம் கருத்தில் எடுத்து செயற்படுவோமாயின் எமது எதிர்காலம் சுபீட்சமும் வளமுள்ளதாகவும் அமையும் என்று தெரிவித்து  இந்தத் தொழிற்பயிற்சி நிலைய நிகழ்வை வளம்பெற வேண்டும், வெற்;றி பெற வேண்டும் என்று  வாழ்த்தி எனது உரையை நிறைவு செய்கின்றேன் என்றார்.

No comments