தரகர் வேலையில் செஞ்சிலுவை சங்கம்?


இலங்கை அரசின் இன அழிப்பின் பங்காளியாக செயற்பட சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் முற்பட்டுள்ளதாவென்ற சந்தேகம் முன்வைக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போனோரின் அலுவலகத்தையோ அவ் அலுவலகத்தின் செயற்பாடுகளையோ காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுக்காளான தாம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அந்த அலுவலகத்தின் செயற்பாடுகளை எம்மத்தியில் சூட்சுமமாக திணிக்கும் முயற்சியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் செயற்பட்டுவருவதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி மரியாசுரேஸ் ஈஸ்வரி குற்றஞ்சுமத்தியுள்ளார்.

எம்மால் ஏற்றுக்கொள்ளாத இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு துணைபோகும் செயற்பாடுகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஈடுபட்டுள்ளது.தன்னிடம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான முறைப்பாடுகளை கண்டுகொள்ளமல் கைவிட்டு சென்ற செஞ்சிலுவை சங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான எமக்கு ஆதரவாக இருக்கவேணடும்.ஆனால் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தற்போது அரசின் காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தின் கொள்கைகளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மத்தியில் நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

 இரகசியமான முறையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உறவுகள் சிலரை முல்லைத்தீவு மாவட்டத்தில் அழைத்து சந்திப்பினை நடத்தி வருகின்றனர். இந்த செயற்பாட்டால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எமது உறவுகளுக்காக நீதிகோரி வீதியில் போராடும் மக்கள் ஏமாற்றப்பட தொடங்கியுள்ளனர்.

யுத்தம் முடிந்து ஒன்பது வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் குறித்து எம்மத்தியில் வராத சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இன்று அரசின் காணாமல் போனோரின் அலுவலகத்தின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த எம்மத்தியில் வந்து காணாமல் போன உறவினர்களின் உறவுகளை பிரித்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றதெனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

No comments