அரச காணியை அபகரித்த முஸ்லிம் வர்த்தகர் - நாவாந்துறையில் குழப்பம்

யாழ்ப்பாணம் நாவாந்துறை – பொம்மை வெளியில் அரச காணியை முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் அபகரித்துவைத்துள்ளார் என்று தெரிவித்தும் தமக்கு அந்தக் காணி பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று கோரியும் அந்தப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களால் இன்று மாலை அங்கு கூடினர். அதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. அதனால் சிறப்பு அதிரடிப் படையினரும் இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாவாந்துறை பொம்மைவெளிச் சந்தியில் முன்னர் யாழ்ப்பாணம் மாநகர சபையால் கழிவுகள் கொட்டப்பட்ட பயண்படுத்தப்பட்ட காணியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெறுகிறது.

யாழ்ப்பாணம் மாநகர சபையால் முன்னர் கழிவுகள் கொட்டப்பட்ட காணி முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் ஏற்பாட்டில் மாநகர சபை உறுப்பினரான நிலாமால் வேலியிடப்பட்டது. அந்தக் காணியில் முஸ்லிம்களை குடியேற்றும் வகையில் தொடர்மாடி ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த போது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அந்தக் காணிக்குள் நுழைந்த நாவாந்துறையைச் சேர்ந்த தமிழ் மக்கள், அது அரச காணி என்றும் அதனை முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் அபகரித்து வைத்துள்ளார் என்றும் தெரிவித்தனர். அத்துடன், அந்தக் காணியில் நாவாந்துறையைச் சேர்ந்த காணியற்ற தமிழ் குடும்பங்களுக்கு பகிர்தளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்தனர்.

இந்த நிலையில் காணிக்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் நிலாம், அந்தக் காணிக்கான உறுதி தம்மிடம் இருப்பதாகவும் அதனை அரச காணி எனத் தெரிவித்து எவரும் நுழைய முடியாது என்றும் தெரிவித்தார். எனினும் நாவாந்துறையைச் சேர்ந்தவர்கள் அவரின் கருத்தை மறுத்தனர். அதனால் அங்கிருந்த சென்ற நிலாம், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்தார்.

சம்பவ இடத்துக்கு இன்று மாலை 6 மணியளவில் வருகைதந்த யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன், அதனை அரச காணி எனத் தெரிவித்ததுடன், தனியாரிடம் உறுதி இருப்பது தொடர்பில் ஆராயப்படும் என்றும் எதுவென்றாலும் பிரதேச செயலகத்துக்கு வந்து அதிகாரிகளுடன் கலந்துரையாடுமாறு பொது மக்களுக்குத் தெரிவித்துச் சென்றார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் நிலாம் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து அங்கு சிறப்பு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டனர். அத்துடன், இராணுவத்தினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அதனால் பதற்றம் ஏற்பட்டது.

மக்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு படையினர் கேட்டுக்கொண்டனர். எனினும் வீதியில் பொது மக்கள் கூடியதால் படையினர் அவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, காணியின் உரிமையாளரான முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் நாளை உறுதிப் பத்திரத்துடன் நேரில் வந்து இந்த முரண்பாட்டுக்கு தீர்வை முன்வைப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

No comments