சஹ்ரானை தெரியாதென்கிறார் பங்காளி ரிசாட்?

தான் சஹ்ரானை சந்தித்துள்ளதாக தெரிவித்து ஊடகங்களில் வெளியான புகைப்படத்தில் இருப்பது பயங்கரவாதி சஹ்ரான் அல்லவென முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன்று (28) பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
நீங்கள் சஹ்ரானைச் சந்திக்க வில்லையென கூறினாலும், சஹ்ரானை சந்தித்துள்ளதற்கான சான்றுகளாக புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இது குறித்து என்ன கூறுகின்றீர்கள் என முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் தெரிவுக்குழு வினவியதற்கே இவ்வாறு பதிலளித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி அரபுக் கல்லூரியொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படமொன்றையே இவ்வாறு ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. அந்த புகைப்படத்தில் இருப்பது சஹ்ரான் அல்ல. அதில் இருப்பவர் மௌலவி நிஸ்தார் என்பவர்.
தன்னை சஹ்ரான் என ஊடகங்கள் குறித்த புகைப்படத்தை வைத்து காட்டியுள்ளதாக தெரிவித்து எனக்கு கடிதம் ஒன்றையும் நிஸ்தார் மௌலவி அனுப்பியுள்ளார்.  அத்துடன், நிட்டம்புவ பொலிஸிலும் முறைப்பாடொன்றை நிஸ்தார் மௌலவி செய்துள்ளார். அத்துடன் நின்று விடாது, கொழும்பு பொலிஸ் தலைமையகத்திலும் அவர் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.
இந்தப் புகைப்படத்தை வைத்து என்னுடன் சஹ்ரானை தொடர்புபடுத்தப் பார்ப்பது பொய்யான ஒரு குற்றச்சாட்டாகும் எனவும் அவர் தெரிவுக் குழுவில் தெரிவித்துள்ளார். 

No comments