ரிஷாத்திற்கு எதிரான பிரேரணை - ஜூன் 18, 19ஆம் திகதிகளில் விவாதம்


அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிர்வரும் ஜூன் மாதம் 18, 19ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் இன்று அறிவித்தார்.

எதிர்வரும் 6, 7ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று இன்று காலை நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பொது எதிரணியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஆளுங்கட்சியினர் அதனை அனுமதிக்கவில்லை.

குறித்த பிரேரணை மீது எதிர்வரும் 18, 19ஆம் திகதிகளிலேயே விவாதம் நடத்த முடியும் என ஆளுங்கட்சி தரப்பினர் தெரிவித்தனர். இதற்குப் பொது எதிரணி தரப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டது.

இதனால் இறுதி முடிவு எடுக்கப்படாமல் கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவடைந்தது.

இதனையடுத்து நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. இதன்போதும் பிரேரணை மீதான விவாதத் திகதி தொடர்பில் சர்ச்சை எழுந்தது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது எதிர்வரும் 18, 19ஆம் திகதிகளில் விவாதம் நடத்த ஆளுங்கட்சி தயார் என்று சபை முதல்வரான அமைச்சர் லக்‌ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

எனினும், முன்கூட்டியே விவாதம் நடத்தப்பட வேண்டும் என பொது எதிரணியினர் விடாப்பிடியாக நின்றனர். ஆனால், ஆளுங்கட்சி அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. .

“ஜூன் 18, 19 ஆம் திகதிகளில் கட்டாயம் விவாதம் நடத்தப்படும். அதற்கு மேல் கால அவகாசம் வழங்க முடியாது” என்று இதன்போது சபாநாயகர் அறிவித்தார்.

No comments