அமெரிக்காவுடன் எந்த உடன்பாடும் இல்லை - மைத்திரி எதிர்ப்பு

அமெரிக்காவுடன் எந்தவொரு பாதுகாப்பு அல்லது பாதுகாப்புடன் தொடர்புடைய உடன்பாடுகளிலும் கையெழுத்திடக் கூடாது என்று ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சராக தான் பதவியில் இருக்கும் நிலையில், பாதுகாப்புடன் தொடர்புடைய எந்தவொரு உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கும், தனது அனுமதி தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சீனாவில் இருந்து கொழும்பு திரும்பிய பின்னர், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம், இது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வொசிங்டனில் தங்கியிருந்த திலக் மாரப்பன, அமெரிக்கா – சிறிலங்கா இடையிலான சர்ச்சைக்குரிய சோபா உடன்பாட்டின் சில விதிமுறைகள் குறித்த பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த போதே, சிறிலங்கா அதிபர் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

சோபா உடன்பாடு தொடர்பாக, முன்னதாக கொழும்பில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

அதனை பகிரங்கப்படுத்தாமல், துரிதமாக உடன்பாட்டில் கையெழுத்திட அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும், சில திருத்தங்களுடன் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது.

No comments