பதவிவிலகப் போவதில்லை - ஹிஸ்புல்லா, அஸாத் ஸாலி விடாப்பிடி


“ஆளுநர் பதவிகளை நாம் கேட்டுப் பெறவில்லை. ஜனாதிபதியே அதனைத் தந்தார். எனவே, ஜனாதிபதி, எமது பதவிகள் தொடர்பாக எடுக்கும் தீர்மானத்தைத் தவிர்த்து எந்தச் சந்தர்ப்பத்திலும் பதவிகளில் இருந்து நாம் விலகப்போவதில்லை.”

– இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி ஆகியோர் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

ஹிஸ்புல்லா

இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா கருத்துத் தெரிவிக்கையில்,

“எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை. அவை எவற்றையும் ஏற்க முடியாது. அரசியல் ரீதியாக இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். எனினும், ஜனாதிபதியே தீர்மானத்தை எடுக்கவேண்டும்.

ஜனாதிபதியே என்னை ஆளுநராக நியமித்தார். எனவே, அவரே தீர்மானத்தை எடுப்பார். சில பிக்குமார் உட்பட சிலர் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை” – என்றார்.

அஸாத் ஸாலி

மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி கருத்துத் தெரிவிக்கையில்,

“ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. தனக்கு நம்பிக்கையானவரையே தனது பிரதிநிதியாக ஆளுநராக நியமிப்பார்.

இந்தப் பதவியை நாங்கள் கேட்டு வாங்கவில்லை. ஜனாதிபதியே எம்மை நியமித்தார்.

நாங்கள் ஜனாதிபதிக்கு நம்பிக்கையான எமது பணிகளை முன்னெடுத்துச் செல்வோம்.

டந்த நான்கு மாதங்களில் வரலாற்றில் எந்த ஆளுநரும் செய்யாத பணிகளை மேல் மாகாணத்தில் நான் செய்து முடித்திருக்கின்றேன்.

காய்க்கும் மரத்தின் மீதுதான் கல் எறிவார்கள். வேலை தெரியாத பலர் நாட்டில் இருக்கின்றனர். சில வாய்ச்சொல் வீரர்கள் இருக்கின்றனர். தவறாக வழிநடத்தப்படும் சில பிக்குமாரும் இருக்கின்றனர்” – என்றார்.

No comments