நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகள் விபரம் கோரி நீதிமன்றில் விண்ணப்பம்


“நாவற்குழி இராணுவ முகாம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியிலிருந்து அங்கு கடமையாற்றிய பதவிநிலை அதிகாரிகளின் விவரங்கள், மனுதாரர்களால் சுட்டிக்காட்டப்படும் அதிகாரி துமிந்த கெப்பிட்டிவலான இராணுவ சேவையில் கடமையாற்றிய முகாங்களின் விவரம் உள்ளிட்டவையை மன்றில் சமர்க்க உத்தரவிடவேண்டும்”

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் சார்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையில் மனுதாரர்களின் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன், சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தார்.

மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரப்பிக்கப்பட்ட பின்னர் இந்த விண்ணப்பத்தை மீளவும் செய்யுமாறும் அப்போது அதற்கான கட்டளையை வழங்குவதாக மன்று சுட்டிக்காட்டியது.
1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர், கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களில் 3 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அவர்களது பெற்றோரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு எழுத்தாணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்கள் மீதான ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த 10ஆம் திகதி உத்தரவிட்டது. அத்துடன், விசாரணைகளை இன்று மே 24ஆம் திகதி ஆரம்பிக்குமாறும் மேல் நீதிமன்றம் கட்டளையிட்டது.

அதனடிப்படையில் சாவகச்சேரி நீதிமன்றில் நீதிவான் ஜெகநாதன் கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை மனுக்கள் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் மன்றில் முற்பட்டனர். மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி எஸ்.சுபாசினியின் ஏற்பாட்டில் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையானார்.
இராணுவத் தளபதி சார்பில் இராணுவத்தின் சட்ட ஆலோசகரான கப்டன் ஒருவர் முன்னிலையானார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நீதிவான் நீதிமன்றின் விசாரணையின் நடைமுறைகள் என்ன? என்று மன்று கேள்வி எழுப்பியது.

“ஆள்கொணர்வு எழுத்தாணை மனுக்களை விசாரணை நடத்துவது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்துக்கு அரசியலமைப்பில் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றமோ, மேல் நீதிமன்றமோ பொருத்தமாகக் கருதுமிடத்து நீதிவான் நீதிமன்றின் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கையைக் கோர முடியும்.

இந்த மனுக்கள் தொடர்பில் நீதிவான் விசாரணை அதிகாரியாகச் செயற்பட்டு இளைஞர்கள் மூவரும் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சான்றுகள் குறித்து உய்த்தறிவு அறிக்கையை மேல் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்க முடியும்.

அதனடிப்படையிலேயே இந்த மனுக்கள் இந்த மன்றுக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணைகளை நெறிப்படுத்தும் பொறுப்பு மனுதாரர்களுக்கும் பிரதிவாதிகளுக்கும் உண்டு. அதனை நாம் முன்னெடுப்போம்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த வழக்கில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரை விசாரணைகளுக்கான ஹோமாகம நீதிவான் பயன்படுத்தியிருந்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரை படை முகாமுக்குள் விசாரணை நடத்த இராணுவம் தடை விதித்த போதும் நீதிவான் வழங்கிய கட்டளையின் அடிப்படையில் இராணுவம் குழு அமைத்து நீதிமன்றின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியது” என்று மனுதாரர்களின் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் மன்றுரைத்தார்.

No comments