இலங்கையின் தெற்கில் மீண்டும் குழப்பம்?


தெற்கில் மீண்டும் தலைதூக்கியுள்ள சிங்கள- முஸ்லீம் மொதல்களையடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில், வட மேல் மாகாணத்துக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனிடையே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குளியாபிட்டி – பிங்கிரிய – தும்மலசூரிய – ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் நாளை (14) அதிகாலை 4 மணிவரை, பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு ஒருபுறம் சமூக ஊடகங்களிற்கு தடை விதித்துள்ளமையால் தகவல்கள் மறைக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருணாகல் மாவட்டத்தின் பல இடங்களில் நேற்றிரவு முதல் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜூம்மா பள்ளிவாசல் மற்றும் சிறிய பள்ளிவாசல்கள் இரண்டின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இன்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மொத்தமாக அந்த பகுதியில் ஆறு பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டது.

குருணாகல், குளியாப்பிட்டிய, கினியகம பகுதிகளில் முதலில் வன்முறை சம்பவங்கள் பதிவாகின. குளியாப்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை வன்முறை கும்பல் சேதப்படுத்தியதை தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்ககோரி, பொலிஸ் நிலையத்தின் முன்பாக பெருமளவானவர்கள் குவிந்ததை தொடர்ந்து பதற்றம் நிலவியது.

காலையிலிருந்து இந்த பகுதிளில் இராணுவம், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்த போதும், வன்முறை கும்பல் அடாவடியில் ஈடுபட்டது. சில இடங்களில் மின்சார தடையும் ஏற்படுத்தப்பட்டது. முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டன. வர்த்தக நிலையங்கள் தீவைக்கப்பட்டன.

ஹெட்டிபொல நகரிலும் தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. வர்த்தக நிலையங்கள் தீவைக்கப்பட்டன.

வன்முறை கும்பலை கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. வீதிகளில் ரயர்களை போட்டு எரித்தனர்.

இதையடுத்து மதியம் 2 மணிக்கு அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

கொபேகனே மற்றும் ரஸ்நாயக்கபுர பகுதிகளிலும் பதற்றம் நீடித்ததையடுத்து அங்கும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.


No comments