உயிரோடு சமாதி ஆக்கப்பட்ட சிறுவன்! தமிழகத்தில் பரபரப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 வயது சிறுவன் உயிரோடு சமாதி ஆக்கப்பட்ட விவகாரத்தில், அச்சிறுவனின் சடலத்தைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். ஆசிரியர் வேலை பார்த்துவரும் இவர், தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். இவரது மகன் பெயர் தனநாராயணன். நன்றாகப் படிக்கும் இயல்புள்ள இவர், வலிப்பு நோய் காரணமாக பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டார். வீட்டிலேயே யோகாசனப் பயிற்சிகள் செய்து வந்தார். வேலூர் அருகேயுள்ள சிவானந்தா பரமேஸ்வரா ஆசிரமத்திலும் இவர் பயிற்சி பெற்றதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் 24ஆம் தேதியன்று தனநாராயணனுக்கு வலிப்பு ஏற்பட்டு, அவர் தனது வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் தீயணைப்பு நிலையத்துக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் கூறினர். ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின், தீயணைப்பு ஊழியர்கள் தனநாராயணனை மீட்டனர். அப்போது, உட்கார்வது போன்று பத்மாசன நிலையில் அவர் இருந்ததாகக் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, தனநாராயணன் இறந்ததாகத் தெரிவித்தனர். இதனால், அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவில்லை. அந்த நேரத்தில், அப்பகுதியில் இருந்துவரும் பழனி என்ற துறவி தனது உதவியாளர்களுடன் தனநாராயணன் வீட்டுக்குச் சென்றார். அந்த சிறுவனுக்கு நாடித் துடிப்பு இருக்கிறதென்றும், அவர் ஜீவசமாதி அடைய வேண்டுமென்றும் கூறினார்.
இதையடுத்து அரிகிருஷ்ணன் குடும்பத்தினர் தனநாராயணனை உட்கார்ந்த நிலையில் குழிக்குள் வைத்து மண்ணை மூடிப் புதைத்துள்ளனர். அவர் ஜீவசமாதி அடைந்துவிட்டதாகப் பலகை வைத்து, அந்த இடத்தில் பூஜை செய்து வந்துள்ளனர். இந்த தகவல் கேட்டுப் பலரும் அங்கு சென்று பார்த்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் முழுக்க இந்த விஷயம் பரவ, அதன்பின்னரே கடந்த இரண்டு நாட்களாக இது பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. உயிரோடு சமாதி ஆக்கியது மனிதாபிமானமற்ற செயல் என்று எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 22) புதைக்கப்பட்ட சிறுவன் தனநாராயணன் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி. இதையடுத்து அந்த வட்டாரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த தடய அறிவியல் துறையிலுள்ள கமலகண்ணன் தலைமையில் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை நடத்தினர். இதனைக் காண சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து அரிகிருஷ்ணன் தோட்டத்துக்கு வந்தனர்.
மருத்துவர்கள் அளிக்கும் பிரேதப் பரிசோதனை அறிக்கையை முன்வைத்தே மாவட்ட ஆட்சியரின் அடுத்தகட்ட உத்தரவு இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய பழனி மற்றும் அவரது உதவியாளர்கள் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

-மின்னம்பலம்- 

No comments