சுமந்திரன் பதில் சொல்லியே ஆக வேண்டும்!


சர்வதேச நீதிபதிகள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை விசாரணை செய்வதற்கு சட்டரீதியாக முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் வாதம் பொய்யானது.ஐ.நா தீர்மானத்தில் கூறப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியானவிருப்பம் இல்லை.இதனை  தோலுரித்துக்காட்டவே நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் பகவதி தலைமையிலான “சர்வதேச சுயாதீன குழுவை”ஒரு உதாரணமாக சுட்டிக்காட்டியிருந்தார் என தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புசெயலாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் உள்நாட்டில் அமைக்கப்பட்ட உள்ளக ஆணைக்குழுவான உடலகம விசாரணை ஆணைக்குழுவை மேற்பார்வை செய்வதற்காக அமைக்கப்பட்டதே பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன குழு.சர்வதேச தராதரங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாக இந்த உள்ளக ஆணைக்குழு செயற்படவில்லை என்று பகவதி தலைமையிலான குழு தன்னைத் தானே கலைத்தமை இலங்கையில் ஏன் சர்வதேச விசாரணை அவசியம் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. இதனை சி.வி.விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டு, இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல உறுப்புநாடுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்தஅறிக்கையில் வலியுறுத்தி உள்ளார் என்பதையும் அருந்தவபாலன் சுட்டிக்காட்டியுள்ளார். 

தேர்தல்கள் வரும் நிலையில் “சர்வதேச விசாரணை” பற்றி பேசி தனது நிறத்தை மாற்றி தமிழ்  மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஈடுபட்டுள்ளார். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான எமது மக்களை படுகொலை செய்து,பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவத்தை பாதுகாப்பதற்கு ஜெனீவா மனித உரிமைகள் சபையில் முழு மூச்சாக பணியாற்றி விட்டு,நீதிகேட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு செல்லப்போவதாக இங்கு வந்து கூறுகிறார்.  இலங்கைக்கு எதிராக மனிதஉரிமைகள் சபை ஒருகடும் நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது என்று சுமந்திரன்  பலமாதங்களுக்கு முன்னரேயே அதற்காக செயற்படத்தொடங்கியிருந்தார். ஆனால்,கடந்த 10 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் எமது அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கோ அல்லது காணாமல் போன மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கோ எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. 

புதிய அரசியலமைப்பு வரும் அதன் ஊடாக தீர்வுவரும் என்று மக்களை ஏமாற்றி வந்த சுமந்திரன்  அரசியலமைப்புக்கு என்ன நடந்தது தீர்வுக்கு என்ன நடந்தது என்று மக்களுக்கு பதில் சொல்லி ஆக வேண்டுமெனவும் அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். 

No comments