10 நிமிடத்திற்கு முன்னும் எச்சரிக்கப்பட்டது


சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன என்று சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

கொழும்பில் நேற்று அலரி மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.

“தாக்குதல் நடத்தப்படுவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகக் கூட, உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளை வெளிநாட்டு புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

ஏப்ரல் 4ஆம் நாள் தொடக்கம், இந்த புலனாய்வு எச்சரிக்கைகள் காலத்துக்குக் காலம் சிறிலங்கா அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.

48 மணி நேரத்துக்கு முன்னதாகவும், தாக்குதல்கள் நடப்பதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவும் கூட எச்சரிக்கை செய்யப்பட்டது.

ஏப்ரல் 4ஆம் நாள் தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்புள்ளதாக, முதல் முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, கிறிஸ்தவ, கத்தோலிக்க தேவாலயங்கள், விடுதிகள் இலக்கு வைக்கப்படலாம் என்றும் அந்த புலனாய்வுத் தகவல்கள் எச்சரித்திருந்தன.

பெயர்களை குறிப்பிட்டு எச்சரிக்கை

அதற்குப் பின்னர் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ்,  பாதுகாப்புச் செயலரின் சார்பில், ஏப்ரல் 9ஆமு் நாள், இதுபற்றி காவல்துறை மா அதிபருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் பெயரைக் குறிப்பிட்டு, அதன் உறுப்பினர்களான சிலரது பெயரையும் குறிப்பிட்டு, தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடும் வாய்ப்புகள் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

தௌஹீத் ஜமாத்  தலைவர்களான ஷரான் ஹஷ்மி, ஜல்ஹால் ஹிடால், சஜிட் மௌலவி, ஷல்ஹான், ஆகியோர் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதற்காக சிறிலங்கா வந்துள்ளனர் என்றும் அவர் தகவல் தெரிவித்திருந்தார்.

No comments