நம்பகத்தன்மையும் பொறுப்புக்கூறலும் தமிழர் தலைமைக்கும் அவசியமானது - பனங்காட்டான்

கூட்டமைப்புக்குள் கருத்தொற்றுமை இல்லாமற் போவதற்கு காரணமென்ன? சிங்கள அரசியற் கட்சிகளுடனான நட்பு வீட்டுக்குள் பிணக்கை ஏற்படுத்துகிறதா? சிங்கள தேசம் மகிழ்வடையும்
நிலைக்கு தமிழர் தரப்பில் ஏற்படும் பிளவு இப்போது நன்கு புலப்படுகிறது. காலக்கடமைகளை செய்யத்தவறின் காலம் நின்று பதிலளிக்கும்.

நம்பகத்தன்மையும் பொறுப்புக்கூறலும் தனிமனித வாழ்விலிருந்து நாடாளும் அரசாங்கங்கள்வரை அனைவருக்கும் பொதுவானது.

இவற்றில் ஏதாவது பிசகு ஏற்படுமானால் அது எல்லாவற்றையும் நம்பிக்கையற்றதாக்கிவிடும்.

இதனை அடியொற்றியதாக 2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் அமெரிக்கா முன்னெடுத்த இலங்கை தொடர்பான பிரேரணை அமைந்தது. இதன் இணை அனுசரணையாளராக இலங்கை அரசாங்கமே இருந்தது.

முள்ளிவாய்க்காலில் யுத்தம் மௌனிக்கப்பட்டு அடுத்த மாதம் 10 ஆண்டுகள் முடிவடையப்போகிறது. மன்னார் ஆயராகவிருந்த ராயப்பு யோசப் அடிகளார்; அளித்த வாக்குமூலமும் சமர்ப்பித்த அறிக்கையும் இறுதி யுத்தத்தின்போது ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகக் கூறுகிறது.

இந்த எண்ணிக்கையை ஏற்றுக்கொள்ள எந்த சிங்கள தலைமையும் இதுவரை தயாராகவில்லை. மாறாக, இந்த எண்ணிக்கையை இயன்றளவு குறைக்கவே இவை முயன்று வருகின்றன.

ஒரு காலத்தில் இரண்டாகவிருந்த சிங்களத் தலைமை தற்போது மைத்திரி - மகிந்த - ரணில் என மூன்றாகி தமக்குள் அதிகாரப்போட்டியில் மோதிக்கொள்ளும் நிலையிலும், காணாமலாக்கப்பட்ட தமிழ் மக்கள் எண்ணிக்கை விடயத்தில் இவர்களுக்கிடையில் கருத்தொற்றுமை தொடர்கிறது.

இக்கருத்தொருமைப்பாட்டை மூன்று வகையாகப் பார்க்கலாம்.

காணாமலாக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் மரணித்தவர்களின் எண்ணிக்கையை நாற்பதாயிரத்துக்கும் குறைவாக வைத்திருக்க வேண்டுமென்பதில் இவர்கள் ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த விவகாரத்தில் பொறுப்புக்கூறலுக்கு உடன்படக்கூடாது என்பதிலும், ஏற்றுக்கொண்டால் அது சிங்கள இனத்துக்குச் செய்யும் துரோகமாகிவிடும் என்பதிலும் இவர்கள் ஒன்றாகவுள்ளனர்.

நம்பகத்தன்மையென்பது சிங்களச் சமூகம் சொல்வதை மறுபேச்சின்றி சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு எந்த விசாரணையோ ஆணைக்குழுவோ ஏற்படுத்தக்கூடாது என்பதில் இவர்கள் நிலையாகவுள்ளனர்.

யுத்தத்தின் பின்னரான ஒரு தசாப்த காலமானது மேற்சொன்னவற்றை இறுக்கமாகக் கடைப்பிடிப்பதை அவதானிக்கலாம்.

இவ்வகையான ஒரு சூழலிலேயே இலங்கை அரசாங்கம் இந்த வாரம் ஜெனிவாவைச் சந்திக்க தன்னைத் தயார்படுத்தியுள்ளது.

இதற்கு ஏதுவாக மைத்திரி தரப்பும், ரணில் தரப்பும் தனித்தனிக்குழுக்களை அனுப்ப விரும்பினவாயினும் இறுதியில் இரண்டும் ஒன்றாக்கப்பட்டுவிட்டன.

அங்கு செல்லும் ஐந்து பேர் கொண்ட குழு இலங்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ குழுவாக அமையுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினரே அதிகளவில் அங்கம் வகிக்கும் இக்குழுவுக்கு ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த திலக் மாரப்பன தலைமை தாங்குகிறார். சர்வதேசத்தின் எந்தவொரு நெருக்குதலையும் தாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென அங்கு புறப்படுவதற்கு முன்னரே திலக் மாரப்பன அறிவித்துவிட்டார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை ஆதரித்த புத்திஜீவிகள் குழுவில் ஒருவராகவிருந்தவரும், சில மாதங்களுக்கு முன்னர் வடமாகாண ஆளுனராக மைத்திரியால் பொறுக்கியெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டவருமான சுரேன் ராகவனும் இக்குழுவில் இடம்பெறுகிறார். இவரது தெரிவு பலருக்கும் வியப்பளிப்பது மட்டுமன்றி, ஜெனிவா குழுவின் மீதான சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரியின் தனிப்பட்ட நட்பால் சுரேன் ராகவன் வடமாகாண ஆளுனராக நியமனமானபோதே பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. தம்மைத் தமிழ் மக்களின் பிரதிநிதியாக அடையாளம் காட்ட சுரேன் ராகவன் அது தொடர்பான ஒரு தோற்றப்பாட்டினை ஏற்படுத்தவும் முயன்றார்.

தமிழ் அரசியல்வாதிகள் ஜெனிவாவில் சமர்ப்பிக்க தங்கள் தரப்பு விபரங்களை தெரிவிக்கலாமென்று அறிவித்த இவர், வலிந்து காணாமலாக்கப்பட்டோரிடமிருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டது வெறும் அரசியல் பம்மாத்து.

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்களென்பதற்கு சுரேன் ராகவனின் இந்தச் செயற்பாடு நல்லதொரு உதாரணம்.

அரசாங்கத்தின் பிரதிநிதியாக, அதிலும் ஜனாதிபதி மைத்திரியின் கையாளாக இயங்கும் சுரேன் ராகவன் ஜெனிவாவில் அரசாங்கக் குழுவில் ஒருவராக இருந்து கொண்டு தமிழர் தரப்பினர் வழங்கும் மனுக்களை எவ்வாறு சமர்ப்பிக்க முடியும்? சிலவேளை, இந்த மனுக்கள் ஜெனிவாவுக்குப் பதிலாக மைத்திரியின் மேசைக்குள் சென்றுவிடலாம்.

அப்பாவி மக்களை ஏமாற்றும் கைங்கரியத்தை சுரேன் ராகவன் கனகச்சிதமாக அம்மண்ணில் இருந்துகொண்டே செய்துள்ளார்.

இவ்வாறானதொரு காலகட்டத்தில் தமிழ் மக்களின் தலைமை கண்களை இறுக மூடிக்கொண்டு அரசாங்கத்துக்கு சாமரை வீசிக் கொண்டிருப்பது மக்களுக்கு ஏமாற்றமளிக்கிறது.

சிற்சில தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்றவாறு ரணில் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதாக கூட்டமைப்பினர் கூறுகின்றனர். ஆனால் முழுமையாக இரண்டறக் கலந்த நிலையில் அரசாங்கத்தை ஆதரிப்பது வேறு. இதனையே சா~;டாங்க நமஸ்காரம் என்பர்.

தற்போது தமிழர் தலைமை நிலை எவ்வாறுள்ளது என்பது உற்றுக் கவனிக்கப்பட வேண்டியது.

கடந்த அக்டோபரில் உருவான சிங்கள அரசியல் நெருக்கடியின்போது மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை கைப்பற்றிக் கொண்டதை ஏற்றுக் கொள்ளாத தமிழர் தலைமை அதற்காக ரணிலை ஆதரித்ததும், மகிந்தவை பதவியிறக்கியதும் காலத்தின் தேவையாக இருந்திருக்கலாம்.

இதற்குக் கிடைத்த பரிசு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டமைப்பு பறிகொடுத்தது. இவ்விடயத்தில் மகிந்தவுக்கு ஆதரவாக ரணில் இருந்தாரென்பது சம்பந்தனுக்குத் தெரியாததல்ல. இதற்கும் பெயர் ராஜதந்திரமா?

இப்போது ஜெனிவா விவகாரம் கூட்டமைப்புக்குள்ளே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது.

அதன் பங்காளிக்கட்சிகளில் இருவர் கூட்டமைப்பிடம் அனுமதி கேட்காது ஐந்து கட்சிக்கூட்டுக்குள் இணைந்து ஜெனிவா மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதனால் கூட்டமைப்புக்குள்ளிருந்த புரிந்துணர்வு சிதறடிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில் 'சமாதானமா? மீண்டும் யுத்தமா" என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது இரா. சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் அரசாங்கத்தின் ஆமை வேகப் போக்கு அதிருப்தியை மட்டுமன்றி தமிழ் மக்களுக்கு தோல்வியையே ஏற்படுத்துமென்று தெரிந்து கொண்டும் அரசாங்கத்தை ஆதரிப்பது ஏதோவொரு தீர்வைப் பெறுவதற்கேயென சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அப்படியென்றால் சிங்கள அரசாங்கங்களின் ஏமாற்று நடவடிக்கைகளை துகிலுரித்துக் காட்டும் துணிச்சல் தமிழர் தலைமைக்கு இன்னும் ஏற்படவில்லை.

இதனூடாக தெரிவது என்னவெனில் தமிழ் மக்களினதும், பங்காளிக் கட்சிகளினதும் நம்பிக்கையை இழந்துவரும் கூட்டமைப்பு அவர்களுக்கு பொறுப்புக்கூறும் இடத்திலிருந்தும் இறங்கியுள்ளது.

காலமென்பது கட்டுப்பாட்டு வளையத்துக்குட்பட்டது. ஆனால் கூட்டமைப்பு அதற்குள் நிற்காமல் வெளியில் நின்று அரசியல் செய்ய முனைகிறது.

தேர்தல் வருகிறது என்பதும் தமிழ் மக்கள் விழிப்பாக உள்ளனர் என்பதும் தமிழர் தலைமை தெரிந்து கொள்ள வேண்டியது.

No comments