தேர்தல் வேளையில் திரைப்பாடல் வெளியிட்ட நல்லகண்ணு!

இயக்குநர் கரு. பழனியப்பனின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படத்தில் ‘தேர்தல் வருது, தேர்தல் வருது ஜனங்களே ஜாக்கிரதை’ என்ற பாடலை யுகபாரதி எழுதியிருக்கிறார். திடீரென்று இயக்குநருக்கும் கவிஞர் யுகபாரதிக்கும் ஒரு ஆசை. இந்தப் பாடலை தூய்மையான அரசியல்வாதிகளான சங்கரய்யாவும், நல்லகண்ணுவும் சேர்ந்து வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று. உடனடியாக இதுபற்றி தங்கள் நண்பர்களுடன் ஆலோசிக்க பேராசிரியர் ஹாஜா கனி, சிபிஐ மாணவர் இயக்க தோழர் லெனின் ஆகிய நண்பர்களோடு நேற்று மாலை சென்னையில் இருக்கும் சங்கரய்யாவின் வீட்டுக்கு சென்றனர்.
அங்கே நல்லகண்ணு, சங்கரய்யா ஆகியோர் இணைந்து, ‘
’தேர்தல் வருது தேர்தல் வருது ஜனங்க ஜாக்கிரதை..
தேர்தல் வந்தா தெரிஞ்சு போகும் பலரின் யோக்கியதை’
என்ற யுகபாரதியின் பாடலை மிக எளிமையாக லேப்டாப்பில் ப்ளே செய்து வெளியிட்டார்கள்.
பாடல் வெளியீடு மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியலின் மிக மூத்த, மிக தூய்மையான இந்த இரு ஆளுமைகள், இளைஞர்களோடு சேர்ந்து நடத்திய கருத்துப் பரிமாற்றங்கள் இந்த நிகழ்வை மிகவும் கனமானதாக ஆக்கின.
’முதன் முதலில் சங்கரய்யாவை எங்கே சந்தித்தீர்கள்?’ என்று நல்லகண்ணுவிடம் கேள்வி கேட்டனர்.
“1945 ஆம் வருடம் ஒரு தொழிற்சங்க மாநாட்டிலதான் முதன் முதல்ல தோழரை மதுரையில சந்திச்சேன்’ என்று சொன்னதோடு இன்னும் சில நினைவுகளையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார் நல்லகண்ணு.
“ஒரு முக்கியமான தொழிற்சங்க மாநாடு. திருவாரூரில் இருந்து தோழர் மணியம்மை வேட்டி சட்டை கட்டிக் கொண்டு அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார். பல தலைவர்கள் வந்திருக்கிறார்கள். சங்கரய்யாவும் வரவேண்டும். ஆனால் வர தாமதமாகிறது. என்னவென விசாரித்தால், அன்று அவரது தந்தையார் காலமாகிவிட்டார். தந்தைக்கு தான் செய்ய வேண்டிய இறுதிக் கடமைகளை முடித்துவிட்டு நேராக புறப்பட்டு மாநாட்டுக்கு வந்து கர்ஜனை செய்தார் சங்கரய்யா...’ என்று நல்லகண்ணு பகிர்ந்துகொண்டபோது அனைவருக்கும் சிலிர்த்துப் போனது.

”இருவருமே அடிமை இந்தியாவிலும் சிறையில் இருந்தவர்கள். சுதந்திர இந்தியாவிலும் சிறையில் இருந்தவர்கள். ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில் என்று சங்கரய்யாவை பற்றி எழுத்தாளர் சோலை ஒரே வரியில் சொல்லியிருக்கிறார். இப்பேற்பட்ட ஆளுமைகள் எங்களோடு தலைமுறை நெருடல் எதுவுமில்லாமல் பேசினார்கள். எனது காயம்பட்ட காலங்கள் நூலை அவருக்குக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு வாழ்த்தினார்.
‘நானும் நல்லகண்ணுவும் ஓடி ஒடி இந்த நாட்டுக்காக உழைச்சு இப்ப ஓய்ஞ்சு போயிட்டோம். அந்த வேலைய உங்ககிட்ட கொடுக்கிறோம். கவிஞர்கள், இயக்குனர்கள்னு ஒவ்வொருத்தரும் சமூகத்துக்கு நிறைய பங்களிப்பு செய்யணும்’ என்று சங்கரய்யா வேண்டுகோள் வைத்தார்” என்று அந்த நேரத்தின் நெகிழ்வை நம்மிடம் கடத்தினார் பேராசிரியர் ஹாஜாகனி.
பாடல் எப்போது பொதுவெளிக்கு வருகிறது என இயக்குனர் கரு. பழனியப்பனிடம் கேட்டோம். “இன்று மாலை உங்களுக்கு வந்துவிடும்” என்றார்.

-ஆரா -

No comments