மீண்டும் சர்வதேசத்திற்கு செய்தி சொன்ன தமிழர் தாயகம்!


தமிழினத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி இன்று சனிக்கிழமை(16) மதியம் யாழ்.மாநகர மைதானத்தை சென்றடைந்ததுடன் முடிவுக்கு வந்துள்ளது.யாழ்.பல்கலைக்கழக சமூகம் மீண்டுமொருமுறை தனது மக்களை திரட்டி போராடும் வலுவை வெளிப்படுத்தியுள்ளது.

எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகி பலாலி வீதி, கந்தர்மடம் சந்தி, இந்து மகளிர் கல்லூரி வீதி, பிறவுண் வீதி, நாவலர் வீதி, மின்சார நிலைய வீதி, யாழ். நகரம், வைத்தியசாலை வீதி, மணிக்கூட்டுக் கோபுர வீதி ஊடாக யாழ்.மாநகர சபை மைதானத்தை (சுப்பிரமணியம் பூங்கா முன்பாக) சென்றடைந்திருந்தது.

பேரணி யாழ்.மாநகர சபை மைதானத்தைச் சென்றடைந்திருந்த நிலையில் தெளிவூட்டல் உரை மற்றும் பிரகடன அறிக்கை என்பன வெளியிடப்பட்டிருந்தன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்கள்,முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி,கூட்டமைப்பின் ஒருசாரார்,மத தலைவர்கள்,பொது அமைப்புக்களினை சேர்ந்தோர் என பலரும் பல்கலைக்கழக சமூகத்துடன் இணைந்திருந்தனர்.

இதேவேளை பேரணிக்கு வருகை தந்திருந்த தமிழரசுக்கட்சி தலைவர் மாவைசேனாதிராசாவை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் சி.வி.விக்கினேஸ்வரன் வரவேற்றிருந்தார்.



No comments