ஒழித்து விளையாடிய கூட்டமைப்பு எம்.பிக்கள்

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தபோதும் கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

சிவசக்தி ஆனந்தன், எஸ்.வியாழேந்திரன் தவிர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய 14 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 11 பேர் மட்டுமே பட்ஜட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்றுச் சபையில் இருந்தபோதும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. ஆயினும், அவரது ரெலோ கட்சியின் மற்றொரு எம்.பியான கவீந்திரன் கோடீஸ்வரன் பட்ஜட்டை ஆதரித்து வாக்களித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் சுகவீனமுற்ற தனது தாயாரைப் பார்ப்பதற்காக நேற்று மட்டக்களப்புக்குச் சென்றிருந்தார். ஆயினும் பட்ஜட் வாக்களிப்பில் பங்கேற்பதற்காக அவர் அவசர அவசரமாக கொழும்பு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் இராஜகிரியவை அடைந்தபோது சபையில் வாக்களிப்பு முடிவடைந்திருந்தது.

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், “இன்று பட்ஜட் வாக்களிப்பா?” என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டார் என்றும், ஆயினும் பின்னர் அவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்றும் கூறப்பட்டது. அதேவேளை, யாழ்ப்பாணத்தில் அவர் நிகழ்வொன்றில் கலந்துகொண்டதனால் ‘பட்ஜட்’ வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியவில்லை என்று பிறிதொரு தகவல் தெரிவித்தது.

No comments