ஆண்கள் மாறாதவரை ‘நம்பித்தானே வந்தன்’ என்ற கதறல்உயிர்க்குலையை அறுக்கத்தான் செய்யும்...!


‘நம்பித்தானே வந்தேன்...’ 

இது பொள்ளாச்சியில் வெடித்துக் கதறிய ஓலம் மட்டுமல்ல. சிறுபத்திரிகை சார்ந்த இலக்கிய வெளி; பெரியாரிஸ்ட், அம்பேத்கரிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சமூகநீதி அமைப்புகள்; பிறமொழிப் படங்களின் திரையிடல் நிகழ்வு; தேசியம், திராவிடம், தமிழ்த் தேசியம், தலித்தியம், மார்க்சியம் உள்ளிட்ட அரசியல் வகுப்புகள்; அனைத்து மத குருமார்களின் மடங்கள்...

என சகல இடங்களிலும் ஒவ்வொரு நொடியும் கதறித் துடிக்கும் குரல்தான். 

கவிதை அல்லது கதை எழுதத் தெரிந்த பெண்கள், தங்கள் ஆற்றலை முகநூலில் வெளிப்படுத்தும்போது பாய்ந்துச் சென்று லைக் இட்டு இன்பாக்ஸ் கதவைத் தட்டுபவர்கள் so called சிறுபத்திரிகை ஆட்கள்தான்.

‘எழுத நான் கத்துத் தரேன்... அந்த வரியை இப்படி சுருக்கு... இந்த சொல்லுக்குப் பதிலா வேறு வார்த்தையைப் போட்டா இன்னும் ஆழமான பொருள் கிடைக்கும்...’ என ஆரம்பித்து இந்த நூல்களைப் படி என சிபாரிசு செய்து தங்கள் பிடிக்கு கொண்டு வந்ததும், ‘இன்னார் முகநூலில் எழுதும் பதிவுக்கு விருப்பக்குறி இடாதே... அவனுடன் சாட்டிங் செய்யாதே... அப்படிச் செய்வதாக இருந்தால் என்னுடன் பேசாதே...’ என உளவியல் ரீதியாக மிரட்டி பணிய வைக்க முற்படுவதெல்லாம் எந்த வகையில் சேர்த்தி?

போலவே சமூக அக்கறையுடன்  நிலைத்தகவல் எழுதும் பெண்களை தொடர்ந்து கண்காணித்து, ஸ்டேட்டஸ்களில் மறுமொழி எழுதி, சம்பந்தப்பட்டவரின் பெயருக்கு அருகில் பச்சை விளக்கு எரியும்போதெல்லாம் இன்பாக்ஸுக்குள் நுழைந்து ‘பெரியாரின் இந்த நூலைப் படிங்க, அம்பேத்கரை வாசிங்க, இந்த கம்யூனிஸ்ட் நூலைப் படிங்க...’ என்றெல்லாம் சிபாரிசு செய்து மெல்ல ‘காபி ஷாப்புல மீட் பண்ணலாமா? பொள்ளாச்சி இன்சிடென்ட் தொடர்பா உங்கிட்ட பேசணும்... மக்களைத் திரட்டிப் போராடணும்...’ என நூல் விடுபவர்கள் எல்லாம் எந்த வகையில் யோக்கியமானவர்கள்..?

‘மக்மல் பஃப் படம் பார்த்திருக்கீங்களா..? கிம் கி டுக்..? உங்க ஆபீஸ்ல டவுன்லோட் செய்ய முடியாதா..? வீட்ல செய்யாதீங்க... டேட்டா வீணாகும். என்கிட்ட டிவிடி இருக்கு. 5.1. வீக் என்ட் மீட் பண்ணலாமா..? செழியனோட ‘டு லெட்’ நல்லா இருக்குனு சொல்றாங்க. பேலஸோல டிக்கெட் புக் பண்ணவா..? படம் பார்த்துட்டு அப்படியே டிஸ்கஸ் பண்ணலாம். உங்ககிட்ட ஒரு ஃபயர் இருக்கு. என்ன... கொஞ்சம் அலைபாயறீங்க. அதை சரிப்படுத்திட்டா உலகளவுல பெரிய டைரக்டரா வருவீங்க... தென் அவசியம் நீங்க ‘நிம்ஃபோமேனியா’ பார்க்கணும்...’ என எச்சில் ஒழுக மெசேஜ் டைப் செய்பவர்கள் எந்த வகையில் பொள்ளாச்சி ரேப்பிஸ்ட்டுகளை விட உத்தமர்கள்..?

‘ஹைட்ரோ கார்பன், ஸ்டர்லைட்னு எவ்வளவு கொடுமைகள் நடக்குது பார்த்தீங்களா..? நீங்க எழுதின ஸ்டேட்டஸ் நியாயமானது. உங்க கோபம் இயல்பானது. உங்களை மாதிரி ஆட்களாலதான் இந்த சமூக கொடுமைகளை மாத்த முடியும். அதுக்கு அரசியல் ரீதியா நீங்க தெளிவுப் பெறணும். இரண்டு நாள் வகுப்புக்கு ஏற்பாடு செய்திருக்கோம். கட்டணம் எதுவுமில்ல. நீங்களா எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம்...’ என தங்கள் அமைப்புக்கு ஆள் திரட்டுபவர்கள், வகுப்புக்கு வரும் பெண்களை எப்படி கரெக்ட் செய்யலாம் என திட்டமிடுவது எல்லாம் வன்கொடுமையில் சேராதா..?

இதுதவிர பறையிசை வகுப்புகள், பெண் உரிமை, யோகா க்ளாஸ், வீக் என்ட் டிரக்கிங், இத்யாதி இத்யாதி... என எந்தெந்த வழிகளில் எல்லாம் முகநூலுக்கு வரும் பெண்களை உஷார் படுத்த முடியுமோ அந்த வகையில் எல்லாம் பிராக்கெட் போட முற்படுபவர்கள்தான் இங்கு அதிகம்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். பெண்கள் எழுதும் ஸ்டேட்டஸை வைத்து அவர்களது வர்க்க நிலையை தீர்மானித்து எந்த நிறுவனத்தில் என்ன வேலையில் இருக்கிறார்கள்... எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள்... என்பதை எல்லாம் கணக்கிட்டு அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு முதல் வேலையாக தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஒன்று முழுநேர எழுத்தாளராகிறார்கள் அல்லது முழுநேர புரட்சியாளர்களாக வலம் வருகிறார்கள்.

சுருக்கமாக சொல்வதென்றால் ஃபேஸ்புக்கில் இயங்கும் 99.9% ஆண்கள் பொள்ளாச்சி ரேப்பிஸ்டுகளின் மனநிலையைக் கொண்டவர்கள்தான். 

அந்த அளவுக்கு ஆண்களின் மனது அரசியலும் அதிகாரமும் ஆணவமும் கொண்டதாகத்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 

தங்கள் வக்கிரத்தை தீர்த்துக் கொள்ள இலக்கியம், சித்தாந்தம், தத்துவம், சமூகநீதி, மாற்று சினிமா... என வசதிக்கு ஏற்ப கவசங்களை அணிகிறார்கள்.

எல்லோரையும், எல்லா அமைப்புகளையும் இந்த சிமிழுக்குள் அடக்கவில்லை. ஆனால், இந்த லேபிளில் உலா வரும் வஞ்சகர்கள் அநேகம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆண்கள் மாறாதவரை ‘நம்பித்தானே வந்தேன்...’ என்ற கதறல் எல்லா ஊர்களிலும் அனைத்து இடங்களிலும் ஒலித்து உயிர்க்குலையை அறுக்கத்தான் செய்யும்...
-K.N.சிவராமன்-

No comments