இன அழிப்பு இப்போதும் தொடர்கின்றது!


ஆட்சியிலுள்ள தற்போதைய அரசாங்கமும் திட்டமிட்டு தமிழ் மக்கள் மீதான அடக்குமறைகளினை பிரயோகித்து வருகின்றது. இன அழிப்பில் ஈடுபட்டும் வருகின்றதென மக்கள் எழுச்சிப் பேரணிக்கான யாழ்.பல்கலைக்கழக சமூகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களிற்கு எதிரான சிங்கள பௌத்த பேரினவாத அரசின் அடக்குமுறைகள் என்பவை இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் இன்று வரையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய தமிழ் மக்களிற்கு எதிரான அடக்குமுறையின் உச்சமே 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், காணமலாக்கப்பட்டமையுமாகும். இவ் மனிதகுலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள், மனிதவுரிமை சட்ட மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள், இனப்படுகொலை என்பவற்றிற்கு எதிராக சர்வதேச நீதி விசாரணை ஒன்றினை தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்த போது சர்வதேசம் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஃ1தீர்மானத்தின் மூலம் கலப்பு விசாரணைப் பொறிமுறை உட்பட 25 விடயங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென பரிந்துரை செய்தது. 

மேற்குறிப்பிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஃ1தீர்மானத்தின் 25 பரிந்துரைகளையும் நிறைவேற்றாது கால இழுத்தடிப்பு செய்து வருகின்றமையினையே நாம் அவதானிக்க முடியும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 25 பரிந்துரைகளுள் இலங்கைஅரசாங்கம் நல்லிணக்கம் சம்மந்தமான ஓருகலந்தாய்வு செயலணியை உருவாக்கியது. இவ் செயலணி சில முன்னேற்றகரமான பரிந்துரைகளினை முன் மொழிந்த போதும் இலங்கை அரசாங்கம் அப் பரிந்துரைகளினை வேண்டுமென்றே உதாசீனம் செய்தமையால் நல்லிணக்கத்திற்கான கலந்தாய்வு செயலணி பயனற்றுப் போனது.

அது போலவே காணமல்போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டபோதும் அதன் செயற்திறனற்ற தன்மையாலும் திட்டமிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கையாலும் அதிகாரமற்ற ஒன்றாகவும் காணப்படுவதாலும் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகவே உள்ளது. மேலும் இழப்பீட்டிற்கான அலுவலகம் தொடர்பில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளபோதும் இதுவரையில் இழப்பீட்டிற்கான அலுவலகம் உருவாக்கப்படவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தை  மீளாய்வுசெய்தல் எனும் போர்வையில் அதனை விடவும் மோசமான சட்டம் ஒன்றினை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்றவகையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை புறந்தள்ளிய வகையிலான யாப்புருவாக்க முயற்சிமேற்கொள்ளப்பட்ட போதும் இன்றும் அத்தகைய முயற்சியும் கைகூடாதுள்ளது.

இவ்வாறான நிலையிலே ஐக்கியநாடுகள் மனிதஉரிமைபேரவையின் 25 பரிந்துரைகளும் காணப்படும் நிலையில் மேற்கொண்டு மீளவும் கால அவகாசம் வழங்குவதானது மேலும் கால இழுத்தடிப்பிற்கே வழிவகுக்கும் என்பதால் கால அவகாசம் வழங்குவதனை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது.காலங் கடந்த நீதிமறுக்கப்படும் நீதியேஎன்கின்ற முடிவினை நோக்கி ஐ.நாசபையானது தமிழ் மக்களினைத் தள்ளப்போகிறதா..?என்ற கேள்வியும் நியாயமானதே.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடையும் நிலையிலும் தமிழ் மக்களின் பூர்வீக தாயகத்தில் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான திட்டமிட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை,தொடர்ந்தும் முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்படுகின்றமை, அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை, மக்களின் காணிகளில் இருந்து முழுமையாக இராணுவத்தினரை வெளியேற்றி மக்களினை மீள்குடியேற்றம் செய்யாமை,தமிழ் மக்களின் பூர்வீகதாயகத்தில் பௌத்த விகாரைகள் அமைத்தல் தொடர்கின்றமை,வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தீர்வின்றி தொடர்கின்றமை, மகாவலிஅபிவிருத்தித் திட்டத்தினூடாகவும் தெல்லியல் திணைக்களத்தினூடாகவும் வனவளப் பாதுகாப்பு திணைக்களங்களிற்கூடாகவும் நிலஆக்கிரமிப்புக்கள் தொடர்கின்றமை போன்றதமிழ் மக்களிற்குஎதிரானஅடக்குமுறைகள் இன்றும் தொடரும் நிலையில் காலஅவகாசம் வழங்குவதன் மூலம் இலங்கைத்தீவில் தமிழ் மக்களிற்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்வதனை சர்வதேசமும் அங்கீகரிக்கப் போகின்றதா..?

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடையும் நிலையிலும் யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டதமிழ் மக்களின் வாழ்வாதாரமும் உளத்தேவைகளும் இதுவரையில் மேம்படுத்தப்படவில்லை, 1970களில் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலினால் பல்கலைக்கழகங்களிற்கு உள்வாங்கப்படும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையினைக் குறைக்கப்பட்டதோடு தொடர்ச்சியாக இன்று வரையில் பல்கலைக்கழகங்களிற்குதமிழ் மாணவர்கள் உள்வாங்கப்படுவதில் பாரபட்சம் பார்க்கப்படுகின்றது.அரசியல்,பொருளாதாரரீதியில் அடக்குமுறைக்குள் இருக்கும் தமிழ் மக்களிற்கு விமோசனம் கிடைக்கவேண்டும். ஆகவே இன அடக்குமுறைக்கும், இனப்படுகொலைக்கும் எதிரான சர்வதேச நீதிவிசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் அதனூடாக இனப்பிச்சினைக்கான தீர்வினைநோக்கி இலங்கையினை சர்வதேச சமூகம் நகர்த்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

எனவே தமிழ் மக்கள் ஐக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவையின் 30ஃ1தீர்மானத்தினையே ஏற்றுக்கொள்ளாத நிலையில் தொடர்ந்தும் கால அவகாசம் வழங்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.ஆட்சியிலுள்ள அரசாங்கம் திட்டமிட்டு தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளினை பிரயோகித்து வருகின்றது. மறைமுகமாக இனப்படுகொலையினைப் புரிந்துவருகின்றது. அத்தகைய நடவடிக்கைகளை முடிவுக்குகொண்டுவர  சர்வதேசமட்டத்தில் ஐ.நா சபை செயல்படவேண்டும். இலங்கை விவகாரத்தினை ஐ.நா பொதுச்சபைக்கு அல்லது பாதுகாப்புச் சபைக்குப்பாரப்படுத்துவதன் மூலம் சர்வதேச நீதிமன்றத்தினால் அல்லது விசேடகுற்றவியல் நீதிமன்றத்தினால் இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் விசாரிக்கப்படடுபோர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேணடுமென பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது. 

No comments