அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்த வடக்கு ஆளுநர்!


அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயகர் அதிசங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தலைமைத்தேரரை வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்; இன்று (15) முற்பகல் சந்தித்து ஆசி பெற்றதுடன் அவர் உரையாடியுமுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் வடக்கில் முதலாவது பௌத்த மாநாட்டிற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது இந்த சந்திப்பு நடந்துள்ளது.

தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் பௌத்த விகாரைகள் அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் தரப்புக்கள் பலவும் ஆளுநரது கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள நிலையில் இத்தகைய சந்திப்பு நடந்துள்ளது.

வழமையாக தமிழ் ஆளுநர் ஒருவரை வடக்கிற்கு நியமிப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வந்த அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகள் சுரேன் இராகவன் நியமனத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (15) முற்பகல் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

கண்டி தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் அவர்களை கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல வரவேற்றார்.
இதன்போது ஆளுநர் புனித தந்ததாதுவினை தரிசித்து வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர்.

No comments