அறிக்கை இன்று:துல்லியமான கால அளவு கிடைக்காது?


மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி மாதிரி எலும்புகள் தொடர்பான றேடியோ காபன் ஆய்வு அறிக்கை இன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புளோரிடாவில் உள்ள பீட்டா றேடியோ காபன் ஆய்வகத்தில் இந்த மாதிரி எலும்புகளைச் சோதனையிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வு அறிக்கை  இன்று மன்னார் நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த றேடியோ காபன் ஆய்வு அறிக்கை, குற்றம் நடந்ததாக சந்தேகிக்கப்படும் காலத்தை மாத்திரம் கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“குறிப்பிட்ட நாளுக்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட பத்தாண்டு காலப்பகுதிக்குள் இவை புதைக்கப்பட்டிருக்கலாம் என்பதை, அந்த அறிக்கை உள்ளடக்கக் கூடும்.
பல்வேறு தரப்புகள் மீது குற்றம்சாட்டுவதற்கு இந்த அறிக்கைக்காக பலரும் காத்திருக்கிறார்கள். ஆனால்,  எல்லோருக்கும் ஏமாற்றம் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.
புதைகுழி அகழ்வுப் பணி எப்போது முடிவடையும் என்று கூற முடியாது. ” என்றும் அவர் கூறினார்.

No comments