திருமலையில் முகாமிட்டது ரெலோ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ கட்சியின் 27 உறுப்பினர்களைக் கொண்ட தலைமைக் குழுவின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அக்கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் கூடியுள்ளது.

சமகால அரசியல் நிலைமை, நேற்றுக் கூடிய அரசமைப்புப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழுவின் யோசனைத் திட்டம் ஆகியவை உட்படப் பல விடயங்கள் இக்கூட்டத்தில் ஆராயப்படுகின்றன என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேசமயம், நேற்றுப் பிற்பகல் 3 மணிக்கு கல்முனையில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட இளைஞர் அணி மற்றும் மாவட்டக் குழு தெரிவுகள் நடைபெற்றன.

இன்று திருகோணமலை மாவட்டத்துக்கான கட்சியின் இளைஞர் அணி, மாவட்டக்குழுத் தெரிவும் இடம்பெறவிருக்கின்றன.

நேற்றைய கல்முனைக் கூட்டத்தில் ரெலோவின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், செயலாளர் நாயகம் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, கோவிந்தன் கருணாகரம், கிருஷ்ணமூர்த்தி, பிரசன்னா இந்திரகுமார், ஹென்றி மகேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் உட்படப் பிரமுகர்கள் பலர் பங்குபற்றினர்.

No comments