சம்பந்த புராணம் பாடிய சுரேன் ராகவன்

ஆசியாக் கண்டத்திலேயே சம்பந்தனைப் போல் ஒரு சிறப்பான தலைவரைக் காணக்கிடைக்காது என்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆளுநராக பதவியேற்ற பின்னர் முதல் தெரிவாக எதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்தீர்கள், இதன் நோக்கம் என்னவென்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு புகழ்ந்து பேசினார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவரிடம் மேற்படி கேள்வி எழுப்பப்பட்டது.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நான் ஆளுநர் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு மூத்த கௌரவமான அரசியல்வாதியாகவே சம்பந்தன் ஐயாவை பார்க்கின்றேன். நாடாளுமன்றத்திலும் சிரேஷ்ட உறுப்பினராகப் பல வருடங்கள் பதவி வகிக்கின்றார்.

சமநிலைக்கான அரசியலைக் கொண்டு வருவதற்காக ஜனநாயக ரீதியில் பேச்சுகளை நடத்துவதில் முன்னின்று செயற்படுகின்றார்.

எவ்வளவுதான் விமர்சனம் முன்வைத்தாலும், வீழ்த்த நினைத்தாலும் அனைவரையும் தந்தை போல் அரவணைத்து தமது கடமையை செய்து வருகின்றார்.

இந்த வயதிலும் இதே மூச்சுடனும், பேச்சுடனும் தமிழ் மக்களுக்கான உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் தேசியத் தலைவர் சம்பந்தன்.

ஆசியாக் கண்டத்திலேயே அவரைப் போல் ஒரு தலைவரை பார்க்கக் கிடைக்காது. எனவே, யாழ். தேசிய மண்ணில் காலடி வைப்பதற்கு முன்னர் அவரை சந்திக்காமல் வந்திருந்தால் அது தவறாக அமைந்திருக்கும்” – என்றார்.

No comments