போதை வியாபாரத்தில் 90 வீத பங்குககள் அரசியல்வாதிகளிடம் - சப்ரகமுவ ஆளுநர்


போதைப் பொருள் வியாபாரத்திற்கு அரசியல்வாதிகள் தலையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். நாட்டில் மதுபானசாலைகள் நூற்றுக்கு 90வீதம் அரசியல்வாதிகளுடையதாகும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தெரிவித்தார்.

போதைப் பொருள் பாவனையினை நாட்டிலிருந்து இல்லாதொழிக்கும் வகையில் தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரம் இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று(24) இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பாடசாலை மாணவி ஒருவர், அரசாங்கத்தின் மூலம் மதுபானசாலைகளுக்கு மதுபான விற்பனை அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதுடன், ஒரு வாரத்தில் போதைப் பொருள் பாவனையினை நாடடிலிருந்து இல்லாதொழிக்க வேண்டுமென அரசாங்கமே கூறுகின்றது. இது எமக்கு மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது என்று மாகாண ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து மேலும் கருத்து தெரிவித்த மாகாண ஆளுநர்,


இலங்கையில் மதுபானசாலைகளின் உரிமையாளர்கள் நூற்றுக்கு 90வீதம் அரசியல்வாதிகளாவர். எமது நாட்டில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் விற்பனை நிறுத்தப்படுமானால் இந்நாட்டில் நூற்றுக்கு 90வீதம் மதுபானசாலைகளை மூடுவதற்கு முடியும்.

நாட்டில் மதுபான விற்பனையில் அரசியல்வாதிகள் நேரடியாக சம்பந்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அரசாங்கத்தின் மூலம் மதுபான விற்பனைக்கு வழங்கப்படும் வரி வருவாய்களைவிட மது அருந்திவிட்டு அதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கூடுதலான நிதி செலவிடப்படுகின்றது. இந்நாட்டில் பொருளாதாரம் மற்றும் கல்வி, கலாசாரம் உட்பட பல அபிவிருத்திப் பணிகளுக்கு செலவிடப்படும் நிதிகளே இவ்வாறு செலவிடப்பட வேண்டி உள்ளது என்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் அலுவலகத்தின் செயலாளர் ஹேரத்.பி.குலரத்ன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய, சீவலி மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் கமல் ஆரியவன்ச, இரத்தினபுரி தர்மபால வித்தியாலயத்தின் அதிபர் பீ.பீ.பீ.களுபோவில உட்பட பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments