அரசிலிருந்து வெளியேறுவாராம் பழனி திகாம்பரம்

கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேறினால் அரசிலிருந்து தானும்வெளியேறி அவர்களுடன் இணைந்து போராடத் தயார் என புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்
நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தோட்டத்தொழிலார்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கத்தின் தலைவர்கள் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது 1,000 ரூபாவுக்குக் குறைவாக சம்பளத்துக்கு இடமளிக்கமாட்டோம் என பகலில் கூறிவிட்டு இரவில் 20 ரூபாவுக்கும் 50 ரூபாவுக்கும் இணங்குகின்றனர். இவர்கள் பெருந்தோட்டத்துறை மக்களை காட்டிக்கொடுக்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எனது தாயார் பெருந்தோட்டத்தில் பணியாற்றியவர் என்பதால் அங்குள்ள மக்களின் கஷ்டங்களை உணர்ந்தவன். எனவேதான் 1,50,000ற்கும் அதிகமான வாக்குகளை எனக்கு அம்மக்கள் அளித்திருந்தனர். அவர்களை நான் ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டேன். கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் மூன்று தொழிற்சங்கங்கள் மாத்திரமே கலந்துகொள்கின்றன. இவர்கள் தமக்கென ஒரு சட்டத்தை வகுத்துக் கொண்டு ஏனைய தொழிற்சங்கங்களை இணத்துக் கொள்ளாது தனித்து செயற்படுகின்றனர்.


இவர்கள் பேச்சுவார்த்தைகளிலிருந்து வெளியேறவேண்டும். அவர்கள் வெளியேறினால் அரசாங்கத்திலிருந்து அமைச்சுப் பொறுப்புக்கைளை உதறிவிட்டு நானும் வெளியேறி அவர்களுடன் இணைந்து போராடத் தயாராகவிருக்கின்றேன்.

தொழிலாளர்களின் மிகவும் குறைந்த சம்பளத்தைப் பெறுபவர்களாக தோட்டத்தொழிலாளர்கள் காணப்படுகின்றனர். வெள்ளவத்தையிலிருந்து புறக்கோட்டைக்கு முச்சக்கரவண்டி ஓட்டினால் கூட 500 ரூபாவை ஈட்டிக்கொள்ள முடியும். எனினும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் அதனைவிடக் குறைவாகவே உள்ளது.

அது மாத்திரமன்றி மலைநாட்டுப் பிரதேசத்தில் உள்ள தோட்டங்களை சிறு தோட்டங்களாகப் பிரித்து அங்குள்ள மக்களுக்கு வழங்கவேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

No comments