கூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்!


ரணிலை பிரதமராக்க முடியாதென மைத்திரி ஆணித்தரமாக தெரிவித்துவிட்ட நிலையில் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று கூடவுள்ளது.

இன்றைய கூட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணி அரசிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பதானால் ஐ.தே.முன்னணி 5 நிபந்தனைகளிற்கு இணங்கியே ஆக வேண்டும் என ரெலோ புதிய நிபந்தனைகளை விதிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கம் மீள ஸ்தாபிக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளமைக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறிகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் தரப்பு போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் ரெலோவின் மத்தியகுழுக் கூட்டம் வவுனியாவில் அண்மையில் அவசரமாக கூடியது.

இக் கூட்டத்தில் ரெலோ கட்சியின் மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் 87 உறுப்பினர்களில் 69பேர் பங்குகொண்டிருந்தனர். இக் கூட்டமானது சுமார் 5 மணித்தியாலமாக இடம்பெற்ற நிலையில் ஐ.தே.முன்னணி ஆட்சியமைக்க இணக்கம் தெரிவித்து ஒப்பமிட்ட ரெலோவின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் கடும் கண்டனம் வெளியிடப்பட்டதோடு நீண்ட தர்க்கமும் இடம்பெற்றது. அதன்போது அடுத்த 5ம் திகதிக்கு முன்னர் கூட்டமைப்பின் கூட்டத்தை கூட்டி ரெலோவின் ஐந்து கோரிக்கை தொடர்பில் பரிசீலித்தே ஆக வேண்டுமென தலைவர் செல்வம் அடைக்கலநாதனிற்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று கூடவுள்ள கூட்டத்தில் ரெலோ நிலைப்பாடு பற்றி ஆராயப்படவுள்ளது. 

No comments