சட்டமா அதிபருடன் மைத்திரி ஆலோசனை!


ரணிலை பிரதமராக்க போவதில்லையென்ற மைத்திரியின் விடாப்பிடியின் மத்தியில் இலங்கைச் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவை நேற்றுத் திங்கட்கிழமை இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரமாகச் சந்தித்து உரையாடியுள்ளார். சந்திப்புக் குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் கூறப்படவில்லை.

ஆனாலும் நீதிமன்றத் தீர்ப்புக் குறித்தும் அது தொடர்பாக இலங்கை உயர் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபர் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் தொடர்பாகவும் மைத்திரி விளக்கமளித்ததாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

கொழும்பு மேன்முறையிட்டு நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை அல்லது நாளை புதன்கிழமை மனு ஒன்றை தாக்கல் செய்ய மகிந்த தரப்பு எற்பாடு செய்து வருகின்றது. அவ்வாறானதொரு நிலையில் மைத்திரி சட்டமா அதிபரைச் சந்தித்துள்ளார்.

அதேவேளை. உயர் நீதிமன்றத்தைவிட இலங்கை நாடாளுமன்றமே மீயுயர் அதிகாரம் கொண்டது என சட்ட வியாக்கியானம் கொடுக்கப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற முறையில் ஏழு நீதியரசர்களை உள்ளடக்கிய இலங்கை உயர் நீதிமன்றம் ஏழாம் திகதி இறுதித் தீர்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கான ஆலோசனைகளில் இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பு மகிந்த ராஜபக்சவுக்கு நல்ல படிப்பினை என்றும் மகிந்த உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

No comments