நாடாளுமன்றக் கலைப்பு ஜனநாயகப் படுகொலை


இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில்,

“இலங்கை நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயகப் பச்சைப் படுகொலையாகும். இதனையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் இந்திய மத்திய அரசு உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, ஈழத்தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை வருடங்களுக்குள் இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்று இலங்கை அரசியல் சட்டம் மிகத் தெளிவாக வரையறுத்துள்ள நிலையில், அந்த அரசியல் சட்டத்தைக் காலில் போட்டு மிதித்து, அதன் மீது ஏறி நின்று, சிறிதும் மனச்சாட்சியின்றி, நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ள ஜனாதிபதி மைத்திரியின் அராஜகம் பேரதிர்ச்சியளிக்கின்றது. மிக மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி – அதன் மூலம் இலங்கையில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் மிகப் பெரிய ஏமாற்றத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருக்கின்றார்.



கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மாற்றி, வருகின்ற 14ஆம் திகதி புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்ததும், தமிழ் மக்களின் குரல் ஒலிக்கும் நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல – ஜனாதிபதியின் அரசியல் சட்ட அத்துமீறல்!

தமிழர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த அக்கிரமத்தை ஏதோ “அண்டை நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள்” என்று ஒதுக்கி வைத்து விட முடியாது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு தொடக்கத்திலிருந்தே இந்த ஜனநாயக விரோத செயல்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதை விடக் கவலையளிக்கின்றது.

No comments