அரசு தருவது சலுகையல்ல: நட்டஈடே?


பொதுவாகவே தமிழ் மக்கள் புத்திக் கூர்மை மிக்கவர்கள்.எந்த ஒரு காரியத்தையும் மிகவும் விவேகமாக செய்து முடிக்கக் கூடியவர்கள், பொறுமைசாலிகள் என வர்ணிக்கப்படுகின்றார்கள். ஆனால் தமது இனம் சார்ந்த அரசியல் நடவடிக்கைகளில் தமிழர்களின் வகிபாகம் புத்திக்கூர்மை உள்ளதாகவோ விவேகம் மிக்கதாகவோ இல்லாதது கவலைக்கிடமாகின்றதென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் எமது தற்போதைய அரசியல் கள நிலவரங்களை உற்று நோக்கினோமாயின் இதன் தாற்பரியம் எம்மால் உணரப்படலாம். 2015ம் ஆண்டில் இலங்கைக்கான புதிய ஜனாதிபதி தெரிவில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி ஏறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றிய பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறு பிள்ளைகளுக்கு இனிப்புக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவது போன்று காலத்துக்குக் காலம் எமக்கு பல்வேறு உறுதிமொழிகளையும், பசப்பு வார்த்தைகளையும் கூறி தமிழ் அரசியல் தலைமைகளை தமது கபட அரசியலில் விழ வைத்து ஆட்சி நடத்தி வந்துள்ளார். தமிழ் மக்களுக்கு எதுவித நிரந்தரமான நன்மைகளையும் அவரின் அரசாங்கம் பெற்றுத்தரவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். எமது மக்களின் பூர்வீகக் குடியிருப்பு நிலங்களையும், விவசாயக் காணிகளையும், அவர்களின் உடமைகள் பலவற்றையும் பலாத்காரமாக இராணுவ முன்னெடுப்புக்களின் போது கையகப்படுத்தி மிக நீண்ட காலமாக படையினர் தமது பொறுப்பில் வைத்திருந்து வருகின்றார்கள். தற்போது அக் காணிகளில் ஒரு சில பகுதிகளை மீளக் கையளிக்கின்ற போது இந் நிலங்கள் எல்லாம் ஏதோ சிங்கள மக்களின் பூர்வீகச் சொத்துக்கள் போலவும் அவற்றை தமிழ் மக்களுக்கு தார்மீக அடிப்படையில் தாம் வழங்குவது போலவும் ஒரு மாயை விம்பத்தை அரசாங்கம் உருவாக்க முயல்வது நகைப்புக்குரியது. 60,000 ஏக்கருக்கு மேல் எமது நிலங்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. ஒரு சில ஆயிரம் காணிகளே மிகுதி இருக்கின்றன என்று அரசாங்கம் கூறிவருகின்றனர். அவர்கள் கூறுவது தனியார் காணிகள் சம்பந்தமானது. எமக்குரித்தான அரச காணிகள் 60,000 ஏக்கருக்கு மேல் அவர்கள் கைவசம் இருந்து வருகின்றன. 

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் மைத்திரிபால சிறிசேனவாக இருந்தால் என்ன, மஹிந்த ராஜபக்சவாக இருந்தால் என்ன, இரணில் விக்கிரமசிங்க ஆக இருந்தால் என்ன அவர்களின் சிந்தனைகள் எப்போதும் சிங்கள பௌத்த மேலாதிக்க அடிப்படையைக் கொண்ட ஒரு சிந்தனையாகவே அமைந்திருப்பது கண்கூடு. அவர்களுக்கிடையே அரசியல் போட்டிகள், ஆட்சி மாற்றங்கள், அதிகாரப் பிரயோகங்கள் காணப்படுகின்ற போதும் தமிழ் மக்களுக்கெதிரான சிந்தனைகள் அவர்கள் மத்தியில் ஒருமித்தவையாகவே இருப்பதை நாம் நீண்டகாலமாக உணர்ந்திருக்கின்றோம். ஒரு சாரார் நேரடியாக எமக்கு எதிரானவர்கள் என்றால் மறு சாரார் மறைமுகமாக எமக்கு எதிரானவர்கள் ஆவார். இந்த நிலையில் தமிழ்த் தலைவர்கள் தமது புத்தியையும் விவேகத்தையும் பாவித்து தமது உரிமைகளை எவ்வாறு பெறமுடியும் என்று சிந்தித்து செயலாற்ற வேண்டிய அவசியம் எமக்குண்டு. அவ்வாறு நாம் இதுவரையில் செயலாற்றியுள்ளதாகத் தெரியவில்லை. 

இவ்வாறான அரசியல் சூழலில் நாம் தமிழ் மக்களுக்கான உரித்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கு எமது மத்திய அரசுடனும் சிங்கள அரசியல் வாதிகளுடனும், சிங்கள மக்களுடனும் உள்நாட்டில் கருத்துப் பரிமாற்றங்களை நடத்த வேண்டும். அதே நேரம் சர்வதேச அரங்கிலும் எமது நிலைகளை எடுத்துக் கூறி அவர்களை எம் சார்பாகச் சிந்திக்க வைப்பதற்கு ஏற்ற வகையில் நாம் எம்மை தயார்ப்படுத்திக் கொள்வது மிக அவசியமாகும். எமது அரசியல் ரீதியான துர்ப்பாக்கிய நிலை எல்லோர் மத்தியிலும் கொண்டு செல்லப்பட வேண்டும். 

சமாந்திரமாக எமது பொருளாதார நிலைமையினை வலுவடையச் செய்ய வேண்டும். பாரிய செயற்றிட்டங்களை வகுத்து, மேலை நாடுகளில் தொழிலகப் புரட்சியின் போது நகரங்கள் நோக்கி மக்கள் படையெடுத்தது போல் இங்கும் நடைபெற வழிவகுக்காமல் சிறிய, மத்திம தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு கிராம மக்கள் வாழ் இடங்களிலேயே அவர்களுக்கு பொருளாதார மேம்பாட்டை உண்டுபண்ணும் செயல்திட்டங்களை வகுத்து செயற்படுத்த நாம் முனைய வேண்டும். 

நான் என்னைச் சார்ந்த மக்களுக்கு ஒன்றைக் கூறுவதுண்டு. அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், அரச அரசியல் வாதிகள் ஆகியோர் தருவனவற்றைத் தாராளமாகக் கேட்டு வாங்குங்கள். உங்கள் நடைமுறை வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ளுங்கள். ஆனால் வாக்களிக்கும் போது எமக்கு வாக்களியுங்கள் என்பேன். அது துரோகம் அல்லவா? என்று ஒருவர் கேட்டார். இல்லை. அரசாங்கம் இதுவரையில் எமக்கு இழைத்த இன்னல்களுக்கு பலத்த நஷ்டஈட்டைத் தரக் கடமைப்பட்டுள்ளது. அதனையே அவர்கள் வழங்குகின்றார்கள். ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் எமது கொள்கைகளைப் போராடிப்பெற எமக்கு வாக்களியுங்கள் என்பேன். 

கிராமங்கள் தோறும் அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும். அதன் மூலம் அப்பகுதியில் உள்ள மக்கள் தமது தேவைகளை தமக்குள்ளேயே பகிர்ந்து கொண்டு நிறைவேற்றக் கூடிய ஒரு தன்மையை உருவாக்கக்கூடிய வகையில் கிராம முன்னேற்றச் சங்கங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் பல கூட்டங்களில் முன்னெடுத்திருக்கின்றேன். கூட்டுறவுச் சங்கங்களை வளம்படுத்தக் கோரியுள்ளேன். கிராம முன்னேற்றச் சங்கங்கள் ஊடாக முழுமையான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத போதும் கிராம முன்னேற்றச் சங்கங்களின் வளர்ச்சி பெரிதும் மக்களுக்கு உதவுவன என்பதில் ஐயமில்லை. 
அடுத்த கட்டமாக கிராம முன்னேற்றச் சங்கங்கள் கிராம மக்களின் உழைப்பைப்  பிரயோகப்படுத்தி தொழில் முயற்சிகளிலும் ஏற்றுமதிகளிலும் கவனம் செலுத்த வேண்டும். 

அதே போன்று வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழும் பொறியியலாளர்கள் தமது கல்வி அறிவுகளின் அடிப்படையில் தத்தம் பகுதிகளில் காணப்படும் மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படக் கூடிய ஏற்றுமதித் தரம் வாய்ந்த உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். அவற்றின்; மூலம் அந்தந்தப் பகுதிகளில் வாழும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் எமது பொருளாதார நிலைகளை உயர்த்திக் கொள்வதுடன் இக்கால இளைய சமுதாயத்தின் எதிர்மறைச் சிந்தனைகளில் இருந்து அவர்களைப் பாதுகாத்து நல்ல வழியில் தொழில் முனைவோர்களாக, உழைப்பாளிகளாக அவர்களை மாற்றுவதற்கு நாம் முயல வேண்டும். 

உற்பத்திகள் என்பன பெரிய அளவில் இயந்திரங்களைக் கொண்டோ அல்லது பல கோடி முதலீட்டின் கீழோ மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. மிகக் குறைந்த முதலீட்டில் எமது மூளைவளங்களைப் பயன்படுத்தி எவ்வகையான உற்பத்திகளை முன்னெடுக்க முடியும் என்பதனை புத்தி ஜீவிகளாகிய நீங்களே முடிவு செய்ய வேண்டும். வெறும் பத்து ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்ற பற்றிஸ் கடையில் மற்றும் உள்ளூர் உணவகங்களில் சுமார் 25 பெண் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட முடியும் என்றால் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்ற உங்களின் சிந்தனைகளின் வழியில் எத்தனை தொழிற்சாலைகளை உருவாக்க முடியும் என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும். 

தொழில் முயற்சிகள் வளர்ச்சியடைகின்ற போது அரசின் முட்டுக்கட்டைகளும் அதிகரிக்கலாம். அவற்றை எல்லாம் புறந்தள்ளி நாம் முன்னேறக்கூடிய வழிவகைகளை தெரிவு செய்து எமது உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். 

நாம் நேரடியாக ஒரு பெரிய உற்பத்தி கம்பனியை அல்லது தொழிற்சாலையை உருவாக்கப் போகின்றோம் என அனுமதி கேட்டால் நிச்சயம் எமக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட மாட்டாது. அண்மையில் மத்திய கிழக்கு முதலீட்டாளர்களின் அனுசரணையுடன் மரக்கறி மற்றும் பழவகைகளைப் பயிர் செய்து ஏற்றுமதி செய்ய காணி அடையாளப்படுத்தப்பட்டு நில, நீர், சுற்றாடல் தகுதி பற்றிய அறிக்கைகள் பெற்று மத்திய காணி ஆணையாளர் நாயகத்திற்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டது. காணியின் ஒருபகுதி வனத்திணைக்களத்திற்கு உரியதென்று கூறி அவர் எமது விண்ணப்பத்தை கிடப்பில் போட்டுள்ளார். அவ்வளவுக்கும் வனத்திணைக்களம் தான்தோன்றித்தனமாக போர்க்காலத்தில் கூகுள் ஊடாகப் பார்த்து வனத்திணைக்களக் காணி என்று அடையாளம் காட்டிய காணியையே ஆணையாளர் நாயகம் குறிப்பிடுகின்றார். 

ஆகவே நாம் பொதுவாகப் பல்லிளித்துப் பணம் காசைக் காட்டினால் அன்றி பாரிய உற்பத்திக் கம்பனிகளை உருவாக்க முடியாது.  மாறாக அக்கம்பனியில் அல்லது தொழிற்சாலையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை பங்குதாரராகச் சேர்த்தால்த் தான் அனுமதிகள் வழங்கப்படலாம் என்பதே யதார்த்தம். இந் நிலையில் எடுத்த எடுப்பிலேயே மிகப் பெரிய ஒரு நிறுவனத்தை மத்தியின் அருளின்றி பெரும்பான்மையோர் துணையின்றி உருவாக்குவது என்பது இயலாத காரியம். அத்துடன் அவ்வாறான பாரிய தொழிற் கூடங்கள் எமக்கு காலக்கிரமத்தில் சமூக இடப்பெயர்வுகள் மற்றும் சுற்றாடல் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுவன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனினும் எமது சிறு சிறு தொழில் முன்னெடுப்புக்கள் காலக் கிரமத்தில் வளர்ச்சி அடைந்து பெரிய கம்பெனிகளாக உருவாவதற்கு நாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.  

உலகத்தின் அதி உச்ச நிலையில் அனைத்து நாடுகளையும் அடக்கி ஆளுகின்ற அமெரிக்கா கூட சீனாவின் சில கோரிக்கைகளைத் தட்ட முடியாமல் ஒத்துப்போகவேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கின்றது. காரணம் பொருளாதார ரீதியில் உற்பத்தி முயற்சிகளில் சீனா ஓங்கி வளர்ந்திருப்பதன் காரணமாக அமெரிக்கா கூட சில தருணங்களில் சீனாவிடம் மண்டியிடவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை அதற்கு ஏற்பட்டுள்ளது.

எனவே எமது பொருளாதாரத்தை நாம் சுய முயற்சிகள் ஊடாகக் கட்டி எழுப்ப முன்வர வேண்டும். எம்மீது தென் பகுதி அரசியல் தலைமைகளோ அல்லது வெளிநாடுகளோ பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும். 

இன்று பரந்துபட்ட உலோகாய சிந்தனைகளின் அடிப்படையில் நாம் ஏன் உள்ளூரில் நெற்பயிர்ச்செய்கை செய்ய வேண்டும், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து மலிவான விலையில் அரிசியை இறக்குமதி செய்யலாமே என்று உலக வங்கி கேட்கின்றது. அதற்கு நான் உடன்பாடுடையவன் அல்ல. நாடுகளின் அரசியல் சூழ்நிலை மோசமாகிவிட்டால் எமது இறக்குமதிகள் தடைப்படலாம். மக்கள் பட்டினியில் வாட நேரிடும். அத்துடன் தாய்லாந்து அரசியை எம்மவர் ஏற்கவும் மாட்டார்கள். 

ஆகவே நெற்பயிர்ச் செய்கைகளில் இலகுவான, மலிவான உற்பத்திச் செயற்பாடுகளை நாம் ஆய்ந்தறிந்து உட்புகுத்த வேண்டும். நாம் எம்மை நாமாகவே தன்னிறைவு பெற வழிவகுக்க வேண்டும். உலக அரங்கில் நிமிர்ந்து நின்று எமது நியாயமான உரிமைகளுக்கான கோரிக்கைகளை உரத்துக் கூறுவதற்கு தகுதியுடையவர்களாக நாம் எம்மை மாற்ற வேண்டும். இந்நிலையை உருவாக்குவதற்கு வேண்டிய அடிப்படை சிந்தனைகளும் செயல் வடிவங்களும் உங்களிடம் இருந்தே எமக்கு கிடைக்கப்பெற வேண்டும். பாலைவனங்களாக காட்சியளித்த டுபாய் நாட்டை வளங்கொளிக்கும் பூஞ்சோலையாக உங்களைப் போன்ற பொறியியலாளர்களினால் மாற்ற முடிந்ததென்றால் வளங்கொளிக்கும் வடக்கு கிழக்குப் பகுதிகளை எமது சூழலுக்கு ஏற்ப, சுகத்திற்கேற்ப அபிவிருத்தி செய்வதென்பது ஒன்றும் சிரமமான விடயமல்ல. எமக்கு எமது புலம் பெயர் மக்கள் துணை இருக்கின்றார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாதென நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

No comments