அரசியல் குழப்பங்களால் அரச நிர்வாகம் குழம்பிவிடக்கூடாது - மைத்திரி


அரச துறையின் நடவடிக்கைகள் சீர்குலைய இடமளிக்காமல் உரிய முறையில் வழிநடத்துமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அரசியல் குழப்ப நிலை விரைவில் தீர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

அதுவரை அரச கட்டமைப்பின் செயற்பாடுகள் மற்றும் பொதுமக்கள் சேவையை சக்திமயப்படுத்தி முன்னெடுத்துச் செல்வது அரச அதிகாரிகளினது கடமை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து அரச அதிகாரிகளும் கட்சி பேதமின்றியும், நடுநிலையாகவும் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தாம் நம்புவதாகவும் இதுவரை இவ்விடயம் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகாமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

துறைமுகங்கள், மின்சாரம், பெட்ரோலியம், சுகாதார சேவை மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை எவ்வித இடையூறுமின்றி முன்னெடுப்பதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இன்று முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு இணங்க செயற்படாவிட்டால் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் நாடு எனும் ரீதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments