சுமந்திரன் சோடித்த கொலை வழக்கு - கைதிகளின் கோரிக்கை நிராகரிப்பு


எவ்வளவு காலம் உண்ணாவிரதம் இருந்தாலும் ஒரு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்றப்படாது என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்டதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களுக்கும் கொழும்பு மேல் நீதின்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன இன்று தெளிவுப்படுத்தியுள்ளார்.

தமக்கு எதிரான வழக்கை யாழ். மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரி 14 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும், கடந்த 14 நாட்களாக உணவு எதனையும் உட்கொள்ளவில்லை என சந்தேக நபர்கள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்னவிடம் கூறிய போது, அவர் இந்த நிலைமை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதற்கு முன்னர் நடந்த வழக்கு விசாரணையின் போது, சந்தேக நபர்கள் தமக்கு எதிரான வழக்கை யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றவில்லை என்றால், உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க போவதாக கூறியிருந்தனர்.

எனினும் சட்டமா அதிபர் தொடர்ந்த ஒரு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற தனக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, நீதிபதி, சந்தேக நபர்களின் கோரிக்கையை நிராகரித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள 5 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, அவர்களின் மூன்று பேர் தமக்கு எதிரான வழக்கை யாழ். மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments