கெடுகுடி சொல் கேளா? தொடங்கியது கூட்டமைப்பு புலம்பல்!


வடமாகாண முதலமைச்சரின் எச்சரிக்கையினை தாண்டி வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணிக்கு சென்றிருந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்க்கப்பட்டது போன்று ஒப்பாரி வைக்கத்தொடங்கியுள்ளனர்.

இரு முறைகள் கூடிக் கலைந்துவிட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டாலே கூடிய கூட்டத்திற்கான பலன் கிட்டும் .அல்லாவிடின் காலத்தை கடத்துமெர்ரு உத்தியாகவே இதுவும் கருதப்பட்டு விடும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு உள்ளிட்ட நிலங்களை விடுவிக்குமாறு கோரி மக்கள் மேற்கொள்ளும் போராட்ட நிலம் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு விடுவிக்கப்படும் என ஜனாதிபதி கூறியதை நான் அந்த மக்களிடம் பல தடவை கூறினேன். இருப்பினும் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. அவ்வாறானால் எம்மையும் எமது மக்களையும் பிரிக்கும் முயற்சியா என சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோன்று வடக்கின் ஏனைய மாவட்டங்களில் உள்ள நிலங்கள் குறிப்பாக பாடசாலைகள் மற்றும் பண்ணைகள் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது. இருப்பினும் கடந்த கூட்டத்தின் பின்னர் எந்த முன்னேற்றமும் இடம்பெறவில்லை. மாறாக திணைக்களங்களின் பெயரில் நில அபகரிப்புத் தொடர்வதே பதிவு செய்யப்படுகின்றது. 

யாழ்ப்பாண மாவட்டத்திலே கடந்த ஆண்டு மீள் குடியேற்ற அமைச்சு மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சிற்காக குறிப்பிட்டளவு நிதி ஒதுக்கீடு செய்தபோதும் இந்த ஆண்டு மிகச் சொற்ப நிதியே ஒதுக்கியமையினால் மீளக் குடியேறும் மக்களிற்கும் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்பிற்கும் நிதி இல்லை. இதேநேரம் தேசிய நல்லிணக்க அமைச்சின் கடந்த ஆண்டு ஒதுக்கீட்டின் 152 மில்லியன் ரூபாவும் மீள் குடியேற்ற அமைச்சின் 57 மில்லியன் ரூபாவும் வருமதியாகவுள்ள நிலையில் அப் பணத்தை வழங்குவதன் மூலமே முன்னெடுத்த திட்டங்களை நிறைவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக பாடசாலைகள் அமைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அதன் பணிகள் இடம்பெறவில்லை. அதேபோன்று கிளிநொச்சி மாவட்டம் விவசாய மாவட்டம் ஆனால் விவசாயப் பண்ணைகள் படை வசமும் சிவில் பாதுகாப்பு படைகளிடமும் உள்ளதனால் மாவட்டத்தின் அபிவிருத்தியும் வேலை இல்லாப் பிரச்சணையும் நிலவும் நிலையில் அவற்றின் நிலை என்ன சி.சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments