வெடுக்குநாறிக்கு ஏணி அமைக்கவும் காவல்துறை தடை?


வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு இரும்பினால் ஏணிப்படியினை அமைக்கும் ஆலய நிர்வாகத்தின் முயற்சி காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.ஏணியினை மலைப் பகுதியில் பொருத்த முயன்றதனையடுத்தே மீண்டும் காவல்துறை தலையிட்டுள்ளது.

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தமிழ் மக்கள் மேற்கொண்டு வந்த வழிபாடுகளைத் தடை செய்த தொல்பொருள் திணைக்களத்தினர் அப்பகுதியில் ஓர் பௌத்த கோயிலை அமைக்க முயன்ற தரப்பினருக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தனர்.

இம்முயற்சியை அப்பகுதி மக்களும் ஆலய நிர்வாகமும் இணைந்து தடுக்க முற்பட்ட நிலையில் இலங்கைகாவல்துறை ஆலய நிர்வாகத்தை அழைத்து அப் பகுதிக்குச் செல்ல வேண்டாமென தடைவிதித்திருந்தது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தினால் மீண்டும் வழிபட அனுமதிக்கப்பட்டிருந்தது.எனினும் நிர்மாண வேலைகள் எதனையும் மேற்கொள்ளவேண்டாமென உத்தரவிடப்பட்டுமிருந்தது.

இந்நிலையில் அண்மைக்காலத்தில் அதிகமானோர் அப்பகுதிக்குச் சென்று மலையில் உள்ள ஆலயத்திற்கு ஏறிச் சென்றமையினால் நிர்வாகத்தினால் அமைக்கப்பட்டிருந்த ஏணி சேதமடைந்திருந்தது.

இதனால் அங்கே வரும் அனைவரின் பாதுகாப்பு கருதி ஆலய நிர்வாகம் இரும்பினால் ஓர் ஏணிப் படியினை அமைத்திருந்தனர். இதனை மலைப் பகுதியில் பொருத்த முயன்றதனையடுத்தே காவல்துறை மீண்டும் ஆலய நிர்வாகத்தினை நேற்று மாலையில் அழைத்து ஏணிகளை அமைப்பதை தடுத்துள்ளனர்.

No comments