சமல் ராஜபக்சவை சிபாரிசு செய்யும் சம்பந்தன்


அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களாக, நீதியமைச்சர் தலதா அத்துகோரளவும், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவும் நியமிக்கப்படவுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நோர்வே மற்றும் பிரித்தானியாவுக்கான பயணங்களை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும், இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலமைப்பு சபைக்கு பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து, ஐந்து உறுப்பினர்களின்  பெயர்களைப் பரிந்துரைக்க வேண்டும். அவர்களில் இருவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஏனைய மூவர், நாட்டின் பிரதான சமூகங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில், சிவில் சமூகப் பிரதிநிதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும்.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் என்ற வகையில் தலதா அத்துகோரளவின் பெயரை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்மொழிவார் என்று அறியப்படுகிறது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே, தனது தரப்பில் அமைச்சர் மகிந்த சமரசிங்கவை கடந்த செப்ரெம்பர் 17ஆம் நாள் அறிவித்திருக்கிறார்.

பிரதமர், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளைக் கொண்டிராத கட்சிகளில் இருந்து, இன்னும் ஒரு உறுப்பினரை,  நாடாளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும்.

அதேவேளை, சிவில் சமூக அமைப்புகளின் சார்பில் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவை, அரசியலமைப்பு சபைக்கு நியமிக்க முன்மொழியப்பட்டுள்ள போதும், அதனை எதிர்க்கப் போவதாக, கூட்டு எதிரணி அச்சுறுத்தியுள்ளது.

சிவில் சமூகப் பிரதிநிதிகள் மூவரினதும் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

சிவில் சமூகப் பிரதிநிதிகள் மூன்று பேரின் பெயர்கள் தற்போது ஆராயப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா பிரதமர் நாடு திரும்பியதும், அது முடிவு செய்யப்படும்.

கடந்த அரசியலமைப்பு சபை செப்ரெம்பர் 21ஆம் நாளுடன் காலாவதியாகியமை குறிப்பிடத்தக்கது.

No comments