மைத்திரியை குற்றஞ்சாட்டும் சுமந்திரன்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரியாமல், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வெளிநாடு சென்றிருக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு முன்னிலையாகாமல், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வெளிநாடு சென்றமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன்,

“சிறிலங்கா அதிபருக்குத் தெரியாமல், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வெளிநாடு சென்றிருக்க முடியாது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பாதுகாப்புத் தகவல்களை வழங்கக் கூடாது என்று இராணுவ உயர் அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் அறிவுறுத்தியுள்ளார் என்று சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கேட்டிருந்தனர்.

ஹெற்றியாராச்சி நாட்டை விட்டுத் தப்பியோடுவதற்கு அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உதவினார் என்று சந்தேகிக்கப்படுகிறார். இதுபற்றி நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம்.

சிறிலங்கா அதிபருக்கு தனது தலையீடு பற்றித் தெரியும். இது எமக்கு கவலையளிக்கிறது.

சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு வாக்குறுதி அளித்திருந்தது.

இங்கு நீதித்துறை செயல்முறைகளில் அனைத்துலக தலையீடுகள் அவசியம் என்பதை இத்தகைய தலையீடுகள் உறுதி செய்கின்றன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments