சட்ட விரோத ஆட்கடத்தல் இராஜதந்திரி கைது

சட்டவிரோதமாக நான்கு பேரை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர் இத்தாலியின் மிலன், மல்பென்சா விமான நிலைய எல்லை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டோகாவில் இருந்து தனது மனைவி மற்றும் சுமார் 20 வயதுகளை உடைய, இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் என நான்கு இளையோருடன், சுமார் 50 வயதுடைய சிறிலங்கா இராஜதந்திரி இத்தாலி வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

தமதும் மற்றும் மனைவியினதும் இராஜதந்திரக் கடவுச்சீட்டுக்களுடன், குறித்த நான்கு பேரினது கடவுச் சீட்டுக்களையும் இத்தாலிய குடிவரவு அதிகாரிகளிடம் கொடுத்த போதே அவர்கள் சந்தேகம் கொண்டு விசாரித்துள்ளனர்.

அப்போது, அவர்களை தமது மகள்மார் என்றும், இளைஞர்களை மருமகன்கள் என்றும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணைகளில், நால்வரினதும் கடவுச்சீட்டுகள் மோசடி செய்யப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறிலங்கா இராஜதந்திரியின் கைப்பையில் இருந்து சிங்களவர்களான நான்கு இளைஞர்களும், கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வந்த கடவுச்சீட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த இராஜதந்திரி தமது உறவினர் அல்ல என்றும், 4000 யூரோ கொடுத்து வெளிநாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இராஜதந்திரியின் உண்மையான பிள்ளைகளின் கடவுச்சீட்டுகளில் திருத்தம் செய்தே இந்த மோசடியை அவர் புரிந்துள்ளார்.

இதையடுத்து சிறிலங்கா இராஜதந்திரி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவியும், நான்கு இளைஞர்களும் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

No comments