ஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா?


முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரிற்கான அனைத்து சலுகைகளையும் தொடர்ந்து அரசு வழங்கிவருகின்றது.அத்துடன் அரச நிகழ்வில் அமைச்சர்களிற்கான கௌரவத்தை அவர் பெற்றே வருகின்றார்.

இன்றைய தினம் யாழ்.போதனாவைத்தியசாலைக்கு பயணம் செய்த அமைச்சர் ராஜித மற்றும் குழுவினர் விஜயகலா மனம் நோகாது அவருக்கான கௌரவத்தை வழங்கியிருந்தனர்.விஜயகலாவிற்கு பின்னரே அரசின் பங்காளிகளான கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான கௌரவம் கிட்டியிருந்தது.

முன்னதாக பிரதமர் ரணில் மேற்கொண்ட பயணங்களின் போதும் விஜயகலாவிற்கு பிரமுகருக்கான கௌரவத்தை வழங்க அரச தரப்பு தவறியிருக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் இருந்தபோது வடக்கு மற்றும் கிழக்கில் இப்படி வன்முறைகள் நடக்கவில்லை. போதை புழக்கம் இல்லை. எனவே புலிகள் மீண்டும் வலுப்பெற வேண்டும் என விஜயகலா குறிப்பிட்டிருந்தார்.

ஆளும் கூட்டணியில் இடம் பெற்ற அமைச்சரே இப்படி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவை சந்தித்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் விஜயகலா.

வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைகள் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வறான சூழல் ஏற்படுவதற்கு அரசாங்கமானது உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கூறி வந்த  விஜயகலா மகேசுவரன் தற்போது ரணில் ஆலோசனையின் பேரில் அடக்கி வாசித்துவருவது குறிப்பிடத்தக்கது.

No comments