நேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு!

நேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்படுகின்றது. அடுத்த ஜனாதிபதி தேர்தல் கனவிலுள்ள கோத்தபாயவினை முடக்கி வைக்க ரணில் வேகமான காய்நகர்த்தல்களை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஊடக வட்டாரங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

கோத்தபாயவின் நேரடி வழிநடத்தலில் ஆட்கடத்தல்கள்,கொலைகளை வழிநடத்தியவராக நேவி சம்பத் கண்டறிப்பட்டிருந்த நிலையில் அவரது கைது தற்போது முக்கியத்துவம் மிக்கதாகியிருக்கின்றது.

இதனிடையே கொழும்பில் பதினொரு தமிழ் மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தின் பிரதான எதிரியான முன்னாள் கடற்படைச் சிப்பாய் நேவி சம்பத் மறைந்து வாழ்வதற்கு உதவியாக, ஐந்து இலட்சம் ரூபாய்கள் வழங்கப்பட்டிருந்ததாக இலங்கை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் கூறியுள்ளனர். இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதியும் இலங்கை முப்படைகளின் தற்போதைய பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண இந்த நிதியை வழங்கியிருந்ததாக இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸார் கொழும்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சென்ற செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட நேவி சம்பத் நேற்றுப் புதன்கிழமை நீதிமன்றதில் முன்னிலையானபோது குற்றப்புலனாய்வுப் பொலிஸார் இவ்வாறு கூறியுள்ளனர்.  

இலங்கைக் கடற்படைத் தளபதியாக இருந்தபோது, நேவி சம்பத் தப்பிச் செல்வதற்கு அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண முழு ஒத்துழைப்பையும் வழங்கியமைக்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் இலங்கை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் கொழும்பு நீதிமன்றத்தில் விபரமாகக் கூறியுள்ளனர்.

மைத்திரி- ரணில் அரசாங்கத்திலும் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண இலங்கை முப்படைகளின் பிரதானியாகப் பதவி வகிக்கின்றார். இதனை செவிமடுத்த நீதவான், பணம் கொடுக்கப்பட்டமைக்கான விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

குறிப்பாக நேவி சம்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய்கள் இலங்கைக் கடற்படையின் வங்கிக் கணக்கிலிருந்து வழங்கப்பட்டமை தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையான இலங்கை கடற்படையின் வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்துமாறும் நீதவான் பணிப்புரை வழங்கியுள்ளார்.

2006 ஆம் ஆண்டு கொழும்பு தெஹிவளை, கொட்டாஞ்சேனை பிரதேசங்களில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பதினொரு தமிழ் மாணவர்கள் திருகோணமலையில் உள்ள இலங்கைக் கடற்படையின் இரகசிய முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
உறவினர்களினால் கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரனை தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், பிரதான எதிரியான நேவி சம்பத் சென்ற செவ்வாய்க்கிழமை கைது செய்ய்ப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைச் சபையிலும் உறவினர்கள் முறையிட்டிருந்தனர்.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக் கடற்படைத் தளபதியாக இருந்தபோது பதினொரு தமிழ் மாணவர்களின் கொலை உட்பட பல்வேறு கடத்தல்களும் இடம்பெற்றதாக மனித உரிமை அமைப்புகளும் கூறியிருந்தன.

அடுத்து நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படும் கோட்டய ராஜபக்ச, இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்தபோது அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண இலங்கையின் கடற்படைத் தளபதியாகப் பொறுப்பு வகித்திருந்தார்.

No comments